tamilnadu epaper

அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்

அறிவோம் அபிராமி அந்தாதியை   பாடல்

கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த

 

படியே மறையின் பரிமளமே பனி மால் இமயப்

 

பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே

 

அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.

 

கொடியே - கொடியை போன்றவளே!

 

இளவஞ்சிக் கொம்பே = இளமையான வஞ்சி மரத்தில் உள்ள பூக்கொம்பு போன்றவளே!

 

எனக்கு வம்பே பழுத்த படியே = தகுதியில்லாத எனக்குத் காலமில்லாத காலத்தில் பழுத்த பழம் போல் அருள் செய்தவளே!

 

மறையின் பரிமளமே = வேதங்களின் வாசனையே!

 

பனி மால் இமயப் பிடியே = பனி உருகும் இமயத்தில் இருக்கும் பெண் யானையே! (மால் = மயக்கம், மறைத்தல்)

 

 

பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே = பிரமன் முதலிய தேவர்களைப் பெற்ற அன்னையே!

 

அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே = அடியேன் இப்பிறவி முடிந்து இறந்த பின் மீண்டும் இங்கே வந்து பிறக்காத படி உன் அருளை தந்து ஆட்கொள்ள வேண்டும்.

 

 

கொடியைப் போன்றவளே, இளைய வஞ்சி மரத்தில் உள்ள பூக்கொம்பு போன்றவளே, எனக்கு பக்குவம் இல்லாவிட்டாலும் அதனை ஒரு பொருட்டாக கருதாமல் காலமில்லாத காலத்திலும் பழுத்த கனியைப் போன்று பக்குவப்படுத்தி, அதாவது, தானாக பழுக்காத பழத்தை தடியால் அடித்து பழுக்க வைத்தது போல, வேதங்களின் சுகந்தமே, பனியால் மறைக்கப்பட்டுள்ள இமயமலையில் உலாவும் பெண் யானையை போன்றவளே, பிரம்மன் முதலாகிய தேவர்களை பெற்றவளே, (ஆப்ரம்ஹ கீட ஜனனி = பிரம்மன் முதல் புழு பூச்சிகள் வரை படைத்தவள். கீடம் = புழு பூச்சிகள் - லலிதா சஹஸ்ரநாமம்). அடியேன் இப்போது இறந்தால் மீண்டும் பிறவாத வண்ணம் அருள் அளிக்க வேண்டும். (இறவாத இன்ப அன்பு வேண்டி பின் வேண்டுகின்றார் பிறவாமை வேண்டும்...... - காரைக்கால் அம்மையார் பற்றிய பெரியபுராணம்). 

 

மேற்கண்ட பாடலை பிறவாத வரம் வேண்டி பட்டர் பாடியிருக்கிறார்.

 

(வளரும் /தொடரும்)

 

 சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை