கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம் தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே
கொள்ளேன் = வேறு எதையும் நினைக்க மாட்டேன்
மனத்தில் = என்னுடைய மனத்தில்
நின் கோலம் அல்லாது = ஒளி வடிவமான உனது திரு உருவத்தை தவிர
அன்பர் கூட்டம் தன்னை விள்ளேன் = உன் அடியார் கூட்டத்தை விட்டு பிரிய மாட்டேன்
பரசமயம் விரும்பேன் = அம்பிகை வழிபாடு என்று சொல்லக்கூடிய சத்தத்தை தவிர வேறு எந்த வழிபாட்டு முறைகளையும் விரும்ப மாட்டேன்
வியன் மூவுலகுக்கு = பாதாளம், மத்யமம், சுவர்க்கம் என்று சொல்லக்கூடிய மூன்று உலகங்களுக்கும்
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே = உள்ளேயும் வெளியேயும் வியாபித்திருக்கும்
உள்ளத்தே விளைந்த கள்ளே = அடியார்களின் உள்ளத்தே விளைந்த தேனே
களிக்கும் களியே = தேனின் சுவையால் விளையக்கூடிய மகிழ்வே
அளிய என் கண்மணியே = கருணை பொருந்திய என் கண்ணின் மணியே. அளி என்பதற்கு வண்டு என்று பொருள் உண்டு. தேனை கூறி வண்டை கூறுவதால் அம்பிகையின் அருள் ஆகிய தேனை பருகும் வண்டாக பட்டர் இருக்கிறார் என்றும் பொருள் கொள்ளலாம்.
பாதாளம், மத்தியமம், சொர்க்கம் என்று சொல்லக்கூடிய மூன்று உலகிற்கு உள்ளேயும், வெளியேயும் வியாபித்து இருக்கக்கூடிய அன்னையே, உன்னை உபாசிக்கக்கூடிய அன்பர்களின் உள்ளத்தே விளைந்து இருக்கக்கூடிய தேனே (மது ப்ரீதா = மதுவில் விருப்பமுடையவள், மதுமதி = தேனுக்குள் இருப்பவள் லலிதா சகஸ்ரநாமம். மது =தேன்), அந்த தேனின் சுவையால் உண்டாக கூடிய மகிழ்ச்சியே, உன்னுடைய திரு உருவத்தை வணங்கிய நான் இனி வேறு எந்த தெய்வத்தையும் வணங்க மாட்டேன். அதுபோல, உனது அடியார்களையும் விட்டு பிரிய மாட்டேன்.
(தொடரும் / வளரும்)
சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை