tamilnadu epaper

ஆன்லைனில் நூதன முறையில் பணம் திருட்டு: தடுப்பது குறித்து பொதுமக்களை உஷார்படுத்த அடிக்கடி சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் வங்கி அதிகாரிகளுடன் போலீஸ் கூட்டு ஏற்பாடு

ஆன்லைனில் நூதன முறையில் பணம் திருட்டு: தடுப்பது குறித்து பொதுமக்களை உஷார்படுத்த அடிக்கடி சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் வங்கி அதிகாரிகளுடன் போலீஸ் கூட்டு ஏற்பாடு

சென்னை, ஏப்.17-


பொது மக்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் இழப்பதை தடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வங்கி அதிகாரிகளும், போலீசாரும் இணைந்து 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். அதில் ஒன்று பொதுமக்கள் உஷார்படுத்த அடிக்கடி சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள்.


பொது மக்கள் தங்கள் வங்கி கணக்குகளில் இருந்து தினமும் நூதன முறையில் ஆன்லைன் மூலமாக பணத்தை இழந்து வருகிறார்கள். இது போன்ற செயல்களில் ஈடுபடும் சைபர் குற்றவாளிகள் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் செயல்படுகிறார்கள். இதுபோன்ற ஏமாற்றங்களில் இருந்து பொது மக்களை விடுவித்து, அவர்கள் வங்கிகளில் சேமித்து வைத்துள்ள பணத்தை பாதுகாப்பது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மாலை வங்கி அதிகாரிகள் மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இணைந்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள்.


போலீஸ் கமிஷனர் அருண் ஏற்பாட்டில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளும், தனியார் மற்றும் பொதுத் துறை வங்கி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சியின் முடிவில் 5 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-


* வங்கி அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளுக்கு மிகுந்த முன்னுரிமை கொடுத்து பாதிக்கப்பட்ட பொது மக்கள் இழந்த பணத்தை திரும்ப பெற்றுக்கொடுப்பதில் எந்தவித காலதாமதமும் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.


* வழக்குகள் தொடர்பாக வங்கி அதிகாரிகள், போலீசார் கேட்கும் தகவல்கள், ஆவணங்களை போலீஸ் விசாரணைக்கு பயனுள்ள வகையில் உடனடியாக போலீசாருக்கு கொடுத்து உதவ வேண்டும்.


* சைபர் குற்றங்களை தடுப்பதற்காக விழிப்புணர்வு கூட்டங்களை வங்கி அதிகாரிகள் அவ்வப்போது நடத்த வேண்டும்.


* வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் மூத்த குடிமக்கள் அடிக்கடி ஏமாற்றப்படும் சம்பவங்கள் நடக்கிறது. இதனால் வங்கிகள் தங்களுடைய மூத்த குடிமக்களுக்கு அவர்கள் ஏமாறுவதை தடுக்கும் விதமாக அடிக்கடி சிறப்பு விழிப்புணார்வு முகாம்களை நடத்தி உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.


* சைபர் குற்றங்கள் வாயிலாக பொது மக்களுக்கு அதிக இழப்பை ஏற்படுத்தி அவர்களின் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் நொடி பொழுதில் இழக்க செய்து விடுகிறார்கள். இதனால் வங்கிகளில் பணத்தை சேமிக்கும் பொது மக்கள் மனச்சோர்வு அடைகிறார்கள். இதுபோன்ற சம்பவங்களால் பாதிக்கப்படும் பொது மக்களுக்கு உடனடியாக வங்கி அதிகாரிகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும். இதுபோல் பணத்தை இழக்கும் பொதுமக்களுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும் என்ற உறுதிமொழியை கொடுத்து அதை நிறைவேற்றும் வகையில் வங்கி அதிகாரிகள் பொது மக்களோடு ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.


மேற்கண்டவாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.