tamilnadu epaper

இன்று முதல் கத்திரி வெயில் சுட்டெரிக்கும்

இன்று முதல் கத்திரி வெயில் சுட்டெரிக்கும்

மே 28 வரை அவசியமின்றி வெளியே வராதீர்கள்

சென்னை, மே 4

தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவங்குகிறது. வரும் 28 ம் தேதி அக்னி நட்சத்திரம் நீடிக்கும். இந்த கால கட்டங்களில் வெயிலின் ஆதிக்கம் அதிகளவு இருக்கும்என்பதால் அவசியமின்றி வெளியே வராதீர்கள் என தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

கோடை வெயில்

ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை கோடை வெயில் சுட்டெரிக்கும். அப்போது அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலும் 24 நாட்கள் இருக்கும். இதனால், கோடை வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும். ஏற்கனவே சேலம், மதுரை, சென்னை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட இடங்களில் இயல்பை காட்டிலும் வெப்பம் அதிகரித்துள்ளது. சில பகுதிகளில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது.

 இதற்கிடையே, கோடை வெயிலின் போது ஆங்காங்கே குளிர்விக்கும் வகையில், மழையும் பெய்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது. இந்நிலையில், இந்தாண்டு அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது. இது மே 28ம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் வெயில் வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி அதிகமாகவே இருக்கும்.

வெளியே வராதீர்கள்

அக்னி நட்சத்திரத்தின்போது மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள பழச்சாறுகள், குளிர்பானங்கள் போன்றவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில் அவசியமின்றி, வெளியில் செல்லக் கூடாது. மாலை 4 மணிக்கு மேல் வெளியே செல்லலாம். அதிக வெப்பநிலை வெப்பச் சோர்வு மற்றும் வெப்பப் பக்கவாதம் போன்ற வெப்பம் தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கும். இது உயிருக்கு ஆபத்தாகவும் முடியலாம்.

 இந்த காலகட்டங்களில் அதிக வியர்வையை ஏற்படும். இந்த நேரத்தில் நீங்கள் போதுமான நீர் ஆகாரங்களை பருகவில்லை என்றால், அது நீரிழப்புக்கு வழிவகுக்கும். அதீத நீரிழப்பு உடல் செயல்பாட்டை பாதிக்கக் கூடும். மேலும், பிற உடல்நலப் பிரச்சனைகளும் அதிகரிக்கும். எனவே கவனமாக இருந்து உடலைக் காத்துக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. கடந்த முறை அக்னி வெயில் தொடங்கியதும் ஓரிரு நாட்களில் மழை பெய்து வெப்பம் தணிந்தது. ஆனால், இந்த முறை மழை பெய்து கோடை வெப்பத்தைதணிக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும்.