ஓமலூர், ஏப்.20–
வருகிற தேர்தலில் இரட்டை இலைக்கு மேல் தாமரை மலர்ந்தே தீரும் என்று நயினார்நாகேந்திரன் கூறினார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் தமிழக பா.ஜ., புதிய தலைவர் அறிமுக கூட்டம், மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் நடந்தது. இதில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:
2026 சட்டமன்ற தேர்தல் அதிமுக – பாஜ இணைந்து வெற்றி பெறும் எழுச்சி தெரிகிறது. அகில இந்திய தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். தேர்தலில் கடுமையாக உழைக்க வேண்டும். அகில இந்திய தலைமை சொன்னபடி, சமூக வலைத்தளங்களில் முழுமையாக செயல்பட வேண்டும். தவறான மீம்ஸ் போட்டால் காவல்துறை கைது செய்து விடுகிறது. எனவே, அனைவரும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கூட்டணி பற்றி விமர்சனம் செய்தால் வேறு மாதிரி போய்விடும். நம் கூட்டணி உறுதியான கூட்டணி என்பதை மறந்து விடக்கூடாது.
தாமரை மலரும்
இரட்டை இலைக்கு மேல் தாமரை மலர்ந்தே தீரும். எங்களது கூட்டணி நியாயமான, நேர்மையான, ஊழலற்ற கூட்டணி. திமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வருவதற்கு தயாராக இருக்க வேண்டும். நாம் வெற்றி பெற பூத் அளவில் பணியைத் தொடங்க வேண்டும். எத்தனை தொகுதிகள் எந்த இடம் என்பதை மத்திய அமைச்சர் அமித்ஷாவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் முடிவு செய்வார்கள். என்னுடைய அதிகாரம் கட்சியை வளர்ப்பது, தொண்டர்களை பாதுகாப்பது தான்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார்.