லண்டன், மார்ச் 9
லண்டனில் சிம்பொனி இசையை இசைஞானி இளையராஜா அரங்கேற்றம் செய்தார். பெரும் ஆதரவாரத்துடன் ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.
மேற்கத்திய கர்நாடக இசை கலந்த 'வேலியன்ட்' என்ற தலைப்பில் இளையராஜா தனது முதல் சிம்பொனி இசையை 35 நாட்களில் எழுதி உருவாக்கினார்.
லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் உலகின் தலைசிறந்த இசைக்குழுவான ராயல் பிலார்மோனிக் இசைக்குழுவினருடன் இணைந்து தனது சிம்பொனி இசையை அரங்கேற்றினார்.
சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா படைத்துள்ளார்.
இளையராஜாவின் சிம்பொனி இசையை பெரும் கரக்கோஷம் ஆரவாரத்துடன் ரசிகர்கள் கேட்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, இயக்குநர் பால்கி உள்ளிட்ட பலர் பங்கேற்று இசையை மெய்மறந்து ரசித்தனர்.
முன்னதாக இளையராஜா மேடைக்கு வந்ததும் ரசிகர்களின் உற்சாக வரவேற்பால் அரங்கமே அதிர்ந்தது. ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிம்பொனி மட்டும் 45 நிமிடத்திற்கு அரங்கேற்றம் செய்யப்பட்டது.
இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் என பல இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதில் சிம்பொனி இசை அரங்கேற்றிய மேடையில் அவர் இசையமைத்த தமிழ் படத்தில் இடம்பெற்றுள்ள பாடலை பாடியுள்ளார். பாக்யராஜ் இயக்கி நடித்த படம் புதிய வார்ப்புகள் படத்திலிருந்து ‘இதயம் போகுதே’ பாடலை இளையராஜா சிம்பொனி மேடையில் பாடியுள்ளார்.
சிம்பொனி இசையை வெற்றிகரமாக அரங்கேற்றம் செய்த இளையராஜாவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம், பண்ணைபுரத்தில் பிறந்த இளையராஜா, தனது அண்ணன் பாவலர் வரதராஜனால் தமிழக இசை உலகுக்கு அழைத்து வரப்பட்டார்.
1976 ம் ஆண்டு 'அன்னக்கிளி' படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. 50 ஆண்டு கால சினிமா பயணத்தில் 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்த அவருக்கு, மத்திய அரசு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கி கவுரவித்துள்ளது. இன்று உலக மக்களை தனது இசையால் வசியப்படுத்தி உள்ளார்.