லக்னோ:
பஹல்காம் தாக்குதலை அடுத்து போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் ஹரியானாவின் அம்பாலா, மேற்கு வங்கத்தின் ஹசிமாரா பகுதியில் உள்ள இந்திய விமானப் படை தளங்கள் சார்பில், ‘ஆபரேசன் ஆக்ரமன்’ என்ற பெயரில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக போர் பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில் ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் பங்கேற்று உள்ளன.
போர் பயிற்சியின் ஒரு பகுதியாக உத்தர பிரதேசத்தின் கங்கை விரைவுச் சாலையில் ரஃபேல், சுகோய், மிராஜ் உள்ளிட்ட போர் விமானங்கள் நேற்று தரையிறங்கின. பின்னர் அங்கிருந்து சீறிப் பாய்ந்து மேலெழுந்து சென்றன. உ.பி.யின் மீரட், பிரயாக்ராஜை இணைக்கும் வகையில் 1,047 கி.மீ. தொலைவுக்கு கங்கை விரைவுச் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
போர் உள்ளிட்ட அவசர காலங்களை கருத்தில் கொண்டு இந்த சாலையில் ஷாஜகான்பூர் மாவட்ட எல்லைப் பகுதியில் 3.5 கி.மீ. தொலைவுக்கு போர் விமானங்கள் தரையிறங்க சிறப்பு ஓடுதளம் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஓடுதளத்தில் இந்திய விமானப்படையின் மிகப்பெரிய சரக்கு விமானமான சி-130ஜே சூப்பர் ஹெர்குலிஸ் என்ற ஜம்போ விமானம் நேற்று தரையிறங்கியது. ரஃபேல், சுகோய், ஜாகுவார், மிக் ரக போர் விமானங்களும் ஓடுதளத்தில் அடுத்தடுத்து தரையிறங்கின. சுமார் 16-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் கங்கை விரைவுச் சாலையில் தரையை தொடுவதுபோல் கீழிறங்கி, மேலெழுந்து சென்றன.
இதுகுறித்து விமானப்படை வட்டாரங்கள் கூறியதாவது: உத்தர பிரதேசத்தின் பரேலியில் இந்திய விமானப்படைத் தளம் உள்ளது. இங்கு சுகோய் போர் விமானங்கள், துருவ் ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. அவசர காலங்களை கருத்தில் கொண்டு உத்தர பிரதேசத்தின் கங்கை விரைவுச் சாலை, யமுனை விரைவுச் சாலை, ஆக்ரா விரைவுச் சாலை, பூர்வாஞ்சல் விரைவுச் சாலை என 4 சாலைகளில் போர் விமானங்கள் தரையிறங்குவதற்கான ஓடுதளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதில் கங்கை விரைவுச் சாலையின் ஓடுதளத்தில் போர் விமானங்களை தரையிறக்கி தீவிர பயிற்சியை நடத்தினோம். இரவிலும் இந்த சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி சோதனை நடத்தினோம். ஓடுதளத்தின் அருகிலேயே மருத்துவமனை, எரிபொருள் நிரப்பும் நிலையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. போர்க்காலத்தில் உ.பி.யின் 4 விரைவுச் சாலைகளும் விமானப்படைத் தளங்களாக மாறிவிடும். இவ்வாறு விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.