வயல்வெளி எழுதிவைத்த
காகிதங்களை
காற்று களவாடிச் செல்வதுபோல
பறக்கின்றன கொக்குகள்.
எல்லா மொழிகளின்
எழுத்துருக்களும் பதிகின்றன
ஏர்முனை கிழித்துச் செல்லும்
மண்ணில்!
மரபாயினும் நவீனமாயினும்
பசுமையில் கேள்விக்குறிகளும்
அறுவடை பொழுதில் ஆச்சரியக்குறிகளும்
இட்டு வைக்கின்றன பயிர்கள்.
சொல்லிவிட்ட சொற்களைப்போல
நெல்மணிகளும்
சொல்லாத சொற்களைப்போல
கிழங்குகளுமாய்
செம்மண் எங்கும் செய்யுள்கள்.
மெல்ல உறுத்தத் தொடங்குகிறது
இப்போது எனக்குள்
நான் எழுதும் இலக்கியத்தின்
ஒரு சொல்லுக்கோ எழுத்திற்கோ
ஏதேனும் ஒரு தானியத்தின்
இயல்பு உண்டாவென!
-கீர்த்தி