சென்னை, மே 4
உலகின் ஒவ்வொரு மூலையிலும் சைவ சித்தாந்த ஒளியை ஏற்றுவோம் என பாஜக தேசிய தலைவரும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகம், திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனத்தின் தருமபுரம் சைவ சித்தாந்த ஆராய்ச்சிக்கான சர்வதேச மையமும் இணைந்து 6 வது சைவ சித்தாந்த சர்வதேச கருத்தரங்கம் நேற்று நடந்தது.இதை மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், “வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு,”என்றார். பின்னர் ஆங்கிலத்தில் பேசியதாவது:
சைவ சித்தாந்தம் என்பது வெறுமனே மத தத்துவம் மட்டும் அல்ல. அது நாகரீக மதிப்பீடுகளைக் கொண்டிருக்கிறது. ஆன்மா, கடவுள், உலகம் ஆகியவற்றுக்கு இடையேயான புனிதமான உறவை கற்பிக்கிறது.
ஆசிர்வதிக்கப்பட்ட பூமி
தமிழ்நாடு ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட பூமியாகும். சங்க காலப் பாடல்கள், சைவ முனிவர்கள் இத்தகைய தத்துவத்திற்கு ஊக்கமளித்தனர். தேவாரம், திருவாசகம் தினமும் சக்தி அளிக்கும் வகையில் பாடப்படுகிறது. நமது முன்னோர்களின், காலவரம்பற்ற பக்தியை அது எதிரொலிக்கிறது. தேவாரமானது தெய்வீக ஆற்றலைக் கொண்ட அப்பர், சுந்தரர் மற்றும் ஞானசம்பந்தர் ஆகியோரால் இயற்றப்பட்டதாகும். மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் கடினமான மனம் கொண்டவர்களையும் உருகச் செய்து விடும்.
தன்னடக்கம்
சைவ சித்தாந்தைப் புரிந்து கொள்வது என்பது இருத்தல், தூய்மை, ஆன்மா விடுதலை ஆகியவற்றை பிரதிபலிக்கும் சிவனின் கைலாச மலையை புரிந்து கொள்வதாகும். உலகில் இருந்து துறவறம் பூணுவதால் மட்டும் தன்னடக்கம், சுதந்திரம் அடைய முடியும் என்பதல்ல. அன்பு, தன்னடக்கம், சேவை, தெய்வீகம் ஆகியவற்றின் மூலம் அந்த நிலையை அடைய முடியும் என்ற செய்தியைச் சொல்கிறது.
சைவ சித்தாந்த ஒளி
பொருள் தேடும் ஆதிக்கம் கொண்ட இந்த யுகத்தில், சைவ சித்தாந்தம் என்பது மனிதர்கள், தங்கள் தெய்வீக நிலையை அடைய, ஒவ்வொருவரிடம் உள்ள கடவுளை அங்கீகரித்தல் அதன் மூலம் உலகத்தை புரிந்து கொள்ளுதல் விழிப்புணர்வு பெறுதல் என்பது தான் இதன் வெளிப்பாடாகும். உலகின் ஒவ்வொரு மூலையிலும் சைவ சித்தாந்த ஒளியை ஏற்றுவோம். பணிவு, உண்மை, தெய்வீகம், கொடை, உலகளாவிய அமைதி ஆகிய மதிப்பீடுகளை அவை கொண்டிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தருமபுர ஆதீனம்
இதையடுத்து பேசிய தருமபுரம் ஆதீனம், “உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் சைவ சித்தாந்தத்தை பரப்ப வேண்டும். ஓங்குக சைவ நீதி.... விளங்குக உலகம் எல்லாம்.... என்பதற்கு இணங்க உலகம் முழுவதும் சைவம் பரப்பப்பட வேண்டும். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 14 நாடுகளை சேர்ந்தவர்கள் வந்திருக்கிறார்கள். சைவ சித்தாந்த வகுப்புகள் 18 நகரங்களில் மாலை நேர வகுப்புகள் நடக்கின்றன. இதில் மாணவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். அதே போன்று 75 புத்தகங்கள் இந்த மாநாட்டில் வெளியிடப்படுகின்றன. மாநாட்டு மலருக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கி உள்ளனர்,” என்றார்.