"பார்க்க கரிசட்டி மாதிரி இருக்கா இவள போய் யார் கல்யாணம் பண்ணிக்குவாங்க" மரகதத்தின் சொந்த தாய் மாமனே இப்படி சொல்லும் பொழுது வேறு யாரு தான் அவளின் அழகை ரசிப்பார்கள்.
இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட மாப்பிள்ளைகள் வந்து அவளைப் பெண் பார்த்தார்கள்.
வந்தவர்கள் எல்லாம் பஜ்ஜியையும், காப்பியையும் தான் ரசித்தார்கள் ஏனோ அவளை செல்லாத காசாகவே பார்த்தார்கள்.
அவள் வீட்டில் கண்ணாடியே அவள் முகம் பார்க்க மறுத்து விட்டதோ என்னவோ பாதரசம் இழந்து காணப்பட்டது.
இப்பொழுதெல்லாம் அவள் கண்ணாடி முன்பு நின்று தன்னை அலங்கரித்துக் கொள்ள அவளுக்கு பிடிப்பதில்லை அடிக்கடி கடவுளை திட்டுவாள்.
"என் அழகு எனக்கே பிடித்ததில்லை அப்படி இருக்க நீ எப்படி என்னை உருவாக்கினாய்"
அவள் வீட்டில் போட்டோ பிரேம்களில் இருக்கும் கடவுள்கள் அதற்கு ஒரு பதிலும் சொல்லாமல் ஊமைச்சாமியாய் கிடக்கும்.
ஒவ்வொரு நாளும் அவள் விரத்தியையும், சலிப்பையுமே சொந்தமாக்கி வாழ்வை சுமையாக கழித்து வந்தாள்.
தன்னுடன் படித்த அத்தனை தோழிகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது ஒரு சில பெண்கள் இரண்டு மூன்று குழந்தைகளோடு வீதியில் நடப்பதை பார்க்கும்போது அவளுக்கு பெருமூச்சு மட்டுமே உண்டாயிற்று.
அவளின் அம்மாவும், அப்பாவும் கருப்பாக இருந்தாலும் பார்க்க லட்சணமாகதான் இருந்தார்கள் இவள் மட்டும் விதிவிலக்காய் காணப்பட்டாள்.
உள்ளத்தில் தங்கமானவள் அது அந்த ஊர் உலகத்துக்கு தெரியும் இருந்தாலும் அலங்கோலமான முகத்தை கட்டிக் கொண்டு வாழ்நாள் முழுவதும் எப்படி கூட இருக்க முடியும் என்பதே அவளின் உறவை சார்ந்த மாமன்களின் கேள்விகளாய் இருந்து வந்தது
இப்படி இருக்க கரிசெட்டி என்று அவளுக்கு பெயர் வைத்து அடிக்கடி கேலி பேசும் அவளின் சொந்த தாய் மாமன் இப்பொழுதெல்லாம் கேலிப் பேச்சு பேசுவதில்லை அவளை ஒரு தெய்வமாகவே பார்த்தான்
இப்பொழுதெல்லாம் அவனுக்கு அவள் மீது தனி மதிப்பு உண்டாயிற்று தான் அவளுக்கு வைத்து அந்த கேலி பெயருக்காக அவன் மனம் நொந்துப் போனது
இன்றோ அந்தத் தாய் மாமனுக்கு அவளே பேரழகியாக தெரிந்தாள் அவளை முறையாக திருமணம் செய்து கொண்டான்
அவளின் வெளி அழகை பார்த்து கேலி செய்த அவன் இப்பொழுது கண்ணீர் சிந்தி அவளிடம் மன்னிப்பு கேட்டான்
"மரகதம் உன் மனசு தும்பை பூ போல வெண்மையானது எனக்கு ரெண்டு கிட்னியும் பழுதாயிடுச்சு இனிமே வாழ முடியாதுன்னு டாக்டர் சொல்ல நீ உன்னுடைய கிட்னியை கொடுத்து என் உயிர் பிழைக்கு செய்திருக்கிறாய் இன்று எனக்கு உலக அழகி நீதான்" என்றான்
அவர்களைப் பார்த்து ஒரு பெரியவர் இப்படியாக சொன்னார் நீங்கதான்பா கடவுள் அமைத்த ஜோடி" என்றார்.
-கவிமுகில் சுரேஷ்
தருமபுரி