tamilnadu epaper

எங்கள் ஊர் திருவண்ணாமலை யின் சிறப்பு....

எங்கள் ஊர் திருவண்ணாமலை யின் சிறப்பு....

 

மலையே இறைவனாக வணங்கப்படும் திருவண்ணாமலையில் மகாதீபத் திருவிழா டிசம்பர் மாதம் நான்காம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவண்ணாமலை மிகவும் பழமை வாய்ந்த புண்ணிய திருத்தலமாகும். இங்கு உள்ள கோயிலில் அருணாச்சலேஸ்வரர் அக்னி வடிவத்தில் காட்சியளிக்கிறார். மாதம் தோறும் பௌர்ணமி நாளில் திரளான பக்தர்கள் மலைவலம் வருவதை காண முடிகிறது. பௌர்ணமி நாட்கள் மட்டுமின்றி அம்மாவாசை,விழா காலங்கள், சாதாரண நாட்களிலும் மலைவலம் வருவது வழக்கில் உள்ளது.

 

 சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி. காசியில் நீராடினால் முக்தி. ஆனால் நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. "சிவபெருமான் மலை வடிவமாக அமர்ந்து அருள் வழங்கும் இடம்". நெருப்பை மையப்படுத்தும் அக்னி தளமாக போற்றப்படுகிறது. அடிமுடி காண முடியாதவர் என்பதை உறுதி செய்து காட்டிய இடமிது..

 

 திருவண்ணாமலையின் அமைப்பு:

 

 கிருத யுகத்தில் அக்னி மலையாகவும்,திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன்மலையாகவும் இக்கலியுகத்தில் கல்மலையாகவும் திகழ்கிறது.

 

 திருவண்ணாமலையை கீழ் திசையில் இருந்து பார்த்தால் ஏக மழையாகத் (ஒன்றாக) தெரியும்.மலைச்சுற்றும் வழியில் நின்று பார்த்தால் இரண்டாகத் தெரியும். இது அர்த்தநாரீஸ்வர தத்துவத்தை குறிக்கும். மலையின் பின்னால் மேற்கு திசையிலிருந்து பார்த்தால் மூன்றாகத் தெரியும். இது சிவன் பிரம்மா திருமால் மூவரையும் குறிக்கும் மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனத்தை காணலாம்.

 

 மலையின் உயரம் 2668 அடி. கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோ மீட்டர். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங்களும், பல சந்நிதிகளும், கிரிவலப் பாதையில் எட்டு திசையிலும் இந்திரலிங்கம்,அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயுலிங்கம், குபேர லிங்கம், ஈசான லிங்கம் என அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1008 லிங்கம் அமைந்துள்ளது என்பர்.

 

 மணிப்பூரகத்தலம் :

 ஆறு ஆதார தலங்களில் திருவண்ணாமலை மணிபூரக தலமாக விளங்குகிறது.மனித உடலை பொறுத்த வரை மணிபூரகம் என்பது வயிற்றைக் குறிக்கும். வயிற்றுக்காகத்தான் இந்த உலகமே இயங்குகிறது. எனவே ஒட்டுமொத்த உலக இயக்கமும் அண்ணாமலையாருக்குள் அடக்கம் என்றும் கூறப்படுகிறது.

 

 வழிபட்டோர் :

 

 விசுவாமித்திரர், பதஞ்சலி வியாகர பர்தர்,அகத்தியர், சனந்தனர் முதலானோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன. மேலும் சம்பந்தர்,அப்பர், சுந்தரர்,மாணிக்கவாசகர், நக்கீரர், பரணர், பட்டினத்தார், சேக்கிழார், இடைக்காட்டு சித்தர்,அருணகிரிநாதர், ஈசான ஞான தேசிகர், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர், ரமண மகரிஷி, சேஷாத்திரி சுவாமிகள்,விசிறி சாமியார்,அம்மணி அம்மன், சைவ எல்லப்ப நாவலர் போன்ற எண்ணற்ற பெருமக்கள் போற்றிய தலமாகும்.

 

 தமிழகத்தின் இரண்டாவது பெரிய கோபுரம்:

 

 திருவண்ணாமலை கிழக்கே ராஜகோபுரம் தமிழகத்தின் இரண்டாவது பெரிய கோபுரமாகும். 11 நிலைகளுடன் 217 அடி உயரம் கொண்டது.வீர வல்லாள கோபுரம், கிளி கோபுரம், தெற்கே திருமஞ்சன கோபுரம், தெற்கு கட்டை கோபுரம், மேற்கே பேய் கோபுரம்,மேற்கு கட்டை கோபுரம், வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் வடக்கு கட்டை கோபுரம் என ஒன்பது கோபுரங்களுடன் அழகாகவும் கம்பீரமாகவும் காட்சியளிக்கிறது. ஒவ்வொரு கோபுரத்திற்கும் தனித்தனி புராணக் கதைகள் உண்டு. கோபுரங்கள் நிறைந்த ஆலயம் இது.இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிரகாரங்கள் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 36 மண்டபங்கள், 1000 தூண்கள் கொண்ட ஆயிரம் கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம், பால ரமணர் தவம் செய்த இடம், 43 செப்பு சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாதமண்டபம்... என அத்தனை சிறப்புகளும் ஒன்று இணைந்த ஆலயமாகத் திகழ்கிறது.

 

 திருவண்ணாமலைக்கு "நவதுவார பதி" என்றும் ஒரு பெயர் உண்டு. அதற்கு 9 நுழைவாயில்களை கொண்ட நகரம் என்று அர்த்தம் ஆகும்.

 

 அண்ணாமலை மகாதீபம் :

 

 திருவண்ணாமலையில் வெகு விமர்சியான ஓர் உற்சவ திருநாள் திருக்கார்த்திகை தீப திருநாள். பௌர்ணமி நாளில் 2668 அடி உயரம் கொண்ட திருவண்ணாமலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.

 

 சிவனுக்குரிய மகா தீப விழாவை உமாதேவியே தொடங்கி வைத்ததாக புராணங்கள் கூறுகின்றன.

 

 உமையம்மை இங்கு தவமிருந்து சிவபெருமான் திருமேனியில் ஒரு பாகம் பெற்ற வரலாறு உண்டு.

 தேவர்களுக்கு அக்னி ரூப ஜோதியாய் காட்சி தந்த நாளே திருக்கார்த்திகை திருநாள்.

 

 திருவண்ணாமலை 10 நாட்கள் கார்த்திகை தீபத்திருவிழா நடக்கும். பத்தாம் நாள் மலை மீது தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து 11 நாட்கள் இந்த மகா தீபம் மலை மீது ஒளிரும்.

 

 பர்வத ராஜகுலத்தார் தான் தலைமுறை தலைமுறையாக மகாதீபம் ஏற்றும் உரிமைகளை உடையவர்கள். மகாதீபம் ஏற்ற ஏழு அடி உயரம் கொண்ட கொப்பறையில் 3000 கிலோ பசு நெய், ஆயிரம் மீட்டர் காடா துணி மற்றும் 2 கிலோ கற்பூரம் ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள். இங்கு ஏற்றப்படும் தீபம் 30 கிலோமீட்டர் வரை தெரியும்.

 

  முதலில் அண்ணாமலையாரின் கருவறையில் வைக்கப்படும் கற்பூரம் ஏற்றப்பட்டு அதிலிருந்து நெய் விளக்கு ஒன்றை ஏற்றுவார்கள். அந்த விளக்கை கொண்டு அதிகாலை நான்கு மணிக்கு ஐந்து விளக்குகள் ஏற்றப்படும். இது பரணி தீபம் எனப்படும். ஐந்து தீபங்கள் என்பது...பரணி தீபம், அண்ணாமலையார் தீபம், விஷ்ணு தீபம், நாட்டுக் கார்த்திகை தீபம், தோட்டக் கார்த்திகை தீபம் என்பதாகும். ஒருவரே பல ரூபமாகி பின்வந்த பல ரூபம் ஒருவனாக ஆகி விடுகின்ற தத்துவம் இங்கு உணர்த்தப்படுகிறது.

 

" ஏகன் அனேகன் ஆகி,

 அநேகன் ஏகன் ஆகுதல் "

 

 மாலையில் ஆலயத்தின் கொடி மரம் அருகில் உள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளும் போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்த நாரீஸ்வரர் வெளிவருவார். அவரின் முன்பாக அகண்ட தீபம் ஏற்றப்படும்.அதன் தீப ஒளியை பார்த்து மலை மீது மகா தீபத்தினை ஏற்றுவார்.

 

 கார்த்திகை தீப தரிசன சிறப்புகள் :

 

 கைலாயத்தில் லிங்கம் இருப்பதால் கைலாயம் சிறப்பு. ஆனால் லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு.

 

 இத்தலத்தில் தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.

 

 வல்லாள மன்னனுக்கு மகனாக வந்து அவதரித்து இறைவன் அருள் செய்த பதி இதுவே.

 

 அருணகிரிநாதரின் வாழ்வில் அருள் திருப்பம் ஏற்படக் காரணமாக இருந்த தலம் இதுதான்.

 

 திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்ப்பவர்களின் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும்.

 

 திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து "நமசிவாய" சொன்னால் அந்த மந்திரத்தை மூன்று கோடி தடவை உச்சரித்த புண்ணியம் கிட்டும்.

 

 திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் போது மலைக்கு உள்பகுதியிலும் பூஜைகள் நடக்கும் ஒலி கேட்டதாக ரமணர், சேஷாத்திரி சுவாமிகள் உட்பட பல அருளாளர்கள் கூறியுள்ளனர்.

 

 கார்த்திகை தீபத்தின் மூன்றாவது நாள் மலையை பஞ்சமூர்த்திகளும் வலம் வருவது மிகச் சிறப்பாக நடைபெறும்.

 

 சிவபெருமான் கார்த்திகை தீப நாளில் அக்னியில் நடனம் ஆடுவதாக ஐதீகம். இந்த நடனத்துக்கு "முக்தி நடனம்" என்று பெயர்.

 

 தீப நாளில் மலை மேல் தீபம் காண முடியாதவர்கள் தீப தரிசன நேரத்தில் அதனை நினைத்தாலே அதற்குரிய பலன்கள் கிடைக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு.

 

 திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம் அண்ட சராசரங்களுக்கும் தீப விளக்காக கருதப்படுகிறது. இன்னும் பல்வேறு சிறப்புகள் கொண்ட திருவண்ணாமலை அண்ணாமலையாரை போற்றி வணங்கி அருள் பெறுவோம்..

 

 "நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

 கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க

 ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க

 ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க "

 

 

 முனைவர் உமாதேவி பலராமன்,

117 பைபாஸ் சாலை, திருவண்ணாமலை. 606601.