கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சுமார் இருபத்தி இரண்டு கிலோமீட்டர் தொலைவில் நாற்பது நிமிடங்கள் பயணம் செய்தால் இயற்கை எழில் கொஞ்சும் எங்கள் ஊரை அடையலாம்.எங்கள் ஊர் பெயர் வாள்வச்சகோஷ்டம் ஆறுகளும், குளங்களும் ஒரு சேர்ந்த பகுதி இப்போது இயற்கை விவசாயம் நலிவுற்று விவசாய நிலங்கள் அத்தனையிலும் ரப்பர் மரங்களே பயிரிடப்படுகிறது.
வாள்வச்சகோஷ்டம் எனும் ஊர் வாள்வச்சகோஷ்டம் பேரூராட்சியின் கீழ் வருகிறது.இங்கு சுமார் இருபதாயிரம் மக்களுக்கு மேல் வசிக்கிறோம்.எங்கள் ஊரில் கிறிஸ்தவ மக்களும் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். கிறிஸ்தவ ஆலயங்களும் இருக்கிறது.
எங்கள் ஊரின் சிறப்பைப் பற்றி இனி பார்க்கலாம்.
பழைய பள்ளி அப்பா திருத்தலம்;
வாள்வச்சகோஷ்டத்தின் இன்னொரு பகுதி பள்ளியாடி இங்கு பழையப்பள்ளி அப்பா திருத்தலம் அமைந்துள்ளது.இந்த திருத்தலம் மத நல்லிணக்க தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டாண்டு காலமாக மும்மத பிரார்த்தனை மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்று வருகிறது. இந்த திருத்தலத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த புளிய மரத்தின் அருகில் விளக்கு அமைந்துள்ளது. இந்த விளக்கில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் என மும்மத அடையாளங்கள் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் எந்த வெயில் காலத்திலும் வற்றாத கிணறு அமைந்துள்ளது
இந்தத் திருத்தலத்தில் தீப ஒளியினால் இறைவனை வழிபடுவது சிறப்பு அம்சமாகும். அந்த வகையில் இந்துக்கள் விளக்கேற்றியும், கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தியும், முஸ்லிம்கள் தூபம் காட்டியும் அவரவர் முறைப்படி வணங்குகின்றனர்.கோயிலில் ஒலிக்க விடும் பாடல்களும் மும்மதத்தை சார்ந்த பாடல்களாகவே இருக்கும்.நேர்ச்சைவாசிகள் பெரும்பாலும் வாழைக்குலை,அரிசி, தேங்காய் போன்ற சாப்பிடும் பொருட்களையே கோயிலுக்கு கொண்டு வருவார்கள்..
கோயிலின் சிறப்பாக வருடம் தோறும் அன்னதானம் பிரமாண்டமாக நடைபெறும்.இதற்கான பொருட்களை மக்களிடம் இருந்தே கோயில் நிர்வாகம் பெற்றுக்கொள்வார்கள்..இதன் நோக்கமே எல்லோரும் பசியாற வேண்டும், அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது தான்.
மகிஷாசுரமர்த்தினி அம்மன்;
வாள்வச்சகோஷ்டம் ஊரின் மையப்பகுதியில் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோயில் அமைந்துள்ளது..
நூற்றாண்டு பெருமைமிக்க இந்தக் கோயில் திருவிதாங்கூர் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் முதன்மை ஆலயமாக இருந்தது.இக்கோயிலானது தரைமட்டத்திலிருந்து ஏறக்குறைய மூன்று மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதனால் கோயிலுக்குச் செல்ல படிகட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. படிக்கட்டைக் கடந்தால் இருபுறமும் திண்ணையுடன் கூடிய அனுப்பு மண்டபம் உள்ளது. அதை அடுத்து முகமண்டபம் அமைந்துள்ளது. முகமண்டபமானது ஆறு தூண்கள் கொண்டதாக உள்ளது. இந்தத் தூண்களில் நடராசர், காளி, அர்ஜூனன், கர்ணன், இந்திரஜித், லக்ஷ்மணன் ஆகியோரது சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. முகமண்டபத்தின் வாசலில் இருபுறமும் துவாரபாலகிகள் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் மகிஷாசுரமர்த்தினி நின்ற கோலத்தில் சன்னதியில் அருள்பாளிக்கிறார்.கோயிலுக்குள் சுரங்கப்பாதை ஒன்று உள்ளது,அந்த காலத்தில் மன்னர்கள் சுரங்கப்பாதையை அவர்களின் தேவைக்கு பயன்படுத்தியிருக்கலாம் என்றும், சுரங்கப்பாதையின் தொடர்ச்சி பத்மநாபபுரம் அரண்மனை வரை நீடித்து இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இக்கோயில் அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
திருவிழாவின் போது அம்மனுக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள் வருடத்திற்கு ஒருமுறையே கோயிலுக்கு கொண்டு வரப்படும்.ஆபரணங்கள் அத்தனையும் பத்மநாபபுரம் அரண்மனையும், அறநிலையத்துறையின் கண்காணிப்பில் உள்ளது.சாதிகளுக்கு அப்பாற்பட்ட அறங்காவலர் குழு ஒன்று செயல்பட்டு வருவது தனிச்சிறப்பு.
இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது பக்தர்களின் பெரும் ஏக்கமாக உள்ளது..
சிறப்புகள்;
வாராகி சித்தர் அம்மனுக்கு தினசரி பூஜைகள் செய்வதாக இன்றளவும் நம்பப்படுகிறது.
ஜாதகப்படி அமையப்பெற்ற திருமணங்கள்
கர்மவினைப்படி தடைபட்டால் இங்கு வந்து பரிகார பூஜை செய்தால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.இந்த கோயிலில் தேவதைகள் கிடையாது அம்மன் அசுரனை அழிக்க அத்தனை சக்திகளையும் ஒரு சேரப்பெற்றதாக சொல்லப்படுகிறது.
எருமையாக இருந்த அசுரனை வதம் செய்து
அம்மன் காலால்
மிதித்த படி இருப்பதை
இக்கோயிலில் காணலாம்.
மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோயிலில் பல முறை திருட்டு சம்பவங்களுக்கான முயற்சிகள் நடந்திருக்கிறது.. ஆனால் ஒரு முறையும் எந்த பொருளும் திருடு போனது கிடையாது..இது இக்கோயிலின் சிறப்பாகவும் அம்மனின் அருளால் திருட்டு தடுக்க படுவதாகவும் பக்தர்கள் நம்புகிறார்கள்..
திருடன் ஒருவன் திருட வந்த போது ஆராட்டு குளத்தில் இருந்து வெள்ளை நாகம் ஒன்று வேகமாக வந்ததை கண்டு திருடன் தப்பித்து ஓடிய செய்தியும் சமீபத்தில் நடந்தது.அம்மன் வெள்ளை நாகமாக உருவெடுத்து திருடனை விரட்டியதாக நம்பப்படுகிறது..
குழந்தை இல்லாதவர்கள் கோயிலுக்கு வந்து அம்மனை வழிப்பட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். வெளியூர்களில் இருந்து பெரும்பாலானவர்கள் கோயிலுக்கு பரிகாரங்களுக்காவும்,நேர்ச்சைக்காகவும் வருவது உண்டு மகிஷாசுரமர்த்தினி அம்மனிடம் அடைக்கலம் புகுந்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களுக்கு பெரும் நம்பிக்கையாக இருக்கிறது..
பெயர் காரணம்;
முந்தைய கால திருவிதாங்கூர் மன்னர்கள் போருக்குச் செல்லும் முன்பு இந்த ஆலயத்தின் முன்பு, வாளை வைத்து வணங்குவது வழக்கம். அதனால் தான் இந்த ஊருக்கும் வாள்வச்சகோஷ்டம் எனப் பெயர் வந்ததாக
சொல்லப்படுவது உண்டு..
இன்னொரு கதையில்
போரில் வெற்றி பெற்று திரும்பும் பாதையில், ரத்தக்கறை படிந்தவாளை இந்தக்கோயிலின் பக்கத்திலுள்ள குளத்தில் கழுவியபின்னர் மகிஷாசுரமர்த்தினியை வழிபட்டுச் செல்வார்கள். ஆதலால் வாள்வச்சகோஷ்டம் பெயர் வந்தது என்றும் கூறப்படுவதுண்டு. இந்தப் பெயரை இங்குள்ள 16-ம் நுற்றாண்டு கல்வெட்டு ஒன்றும் கூறுகிறது.
-பெர்லின் செல்வி,1
/93பி,காட்டாத்துறை,
கன்னியாகுமரி மாவட்டம்,