2026 ல் அண்ணா தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தனியாகத்தான் ஆட்சி நடத்துவார், கூட்டணி ஆட்சி என்பதற்கு இடமே கிடையாது என அண்ணா தி.மு.க. எம்.பி. தம்பிதுரை இன்று தெரிவித்தார்.
தீரன் சின்னமலையின் 270வது பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலையின் கீழ் உள்ள திருவுருப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் கலந்துகொண்ட அண்ணா தி.மு.க. எம்.பி. தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
தீய சக்தி திமுகவை ஒழிக்க வேண்டும் என்றால் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். அவர் சொன்னதன் காரணமாக கூட்டணி தொடர்பாக பாஜக தலைவர்கள் அத்வானி மற்றும் வாஜ்பாய் இடம் நான் தான் கூட்டணி குறித்து பேசினேன்.
அப்போதே திராவிட கட்சி எங்களுடன் கூட்டணி வைக்கிறீர்களா என கேட்டனர். அதனடிப்படையில் அப்போது பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டது.
பின்னர், நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியே வந்தவுடன் திமுக கூட்டணி அமைத்தது. அது பொருந்தும் கூட்டணியா, பொருந்தாத கூட்டணியா என்பதை ஸ்டாலின் தான் கூற வேண்டும்.
சந்தர்ப்பவாத கூட்டணி
சந்தர்ப்பவாத கூட்டணியை அமைப்பது திமுகவின் கொள்கை. மக்கள் நலனுக்காக எப்படி பாஜகவுடன் ஜெயலலிதா கூட்டணி அமைத்தாரோ, அதேபோன்ற தற்போது எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். நல்ல முடிவு கிடைக்கும்.
முஸ்லீம்களுக்கு நன்றாக தெரியும், அவர்களுக்கு ஏதாவதொன்று என்றால் நிச்சயமாக நாங்கள் குரல் கொடுப்போம். முஸ்லீம்களுக்கு எந்தவித இடையூறு வந்தாலும் அதிமுக அவர்கள் பக்கம் நிற்கும். கூட்டணி என்ற நிலைமை வந்தபோது கூட வக்ஃபு சட்டத்தை நாங்கள் எதிர்த்து வாக்களித்தோம்.
திடீரென பாஜக கூட்டணி அமையவில்லை. கடந்த பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திலேயே கூட்டணி குறித்து உரிய முடிவு எடுப்பதற்கு அண்ணா திமுக பொதுச்செயலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
அமித்ஷா பல உண்மைகளை கூறியுள்ளார். ஊழல் குறித்து அமித் ஷா பேசியதற்கு முதல்வர் ஸ்டாலின் இதுவரை பேசாதது ஏன்?, அமித்ஷா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு தைரியம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.
கூட்டணி ஆட்சி கிடையாது
தமிழகத்தில் 2026 இல் தேசிய ஜனநாய கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி கிடையாது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி இதுவரை கிடையாது. இனியும் கிடையாது. கூட்டணி தான் கூட்டணி, ஆட்சி இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறியது சரிதான். நாங்கள் கொள்கை கூட்டணியில் சிறப்பாக இருப்பவர்கள் என்றார்.
மேலும், தமிழகத்தில் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என யாரும் கூட்டணி ஆட்சி அமைக்கவில்லை. இதுவரை நடந்த எந்த தேர்தலிலாவது கூட்டணி ஆட்சி தமிழகத்தில் நடந்திருக்கிறதா? தமிழகத்தில் திராவிட கட்சிகளில் கூட்டணி ஆட்சி இருந்தது இல்லை. இனி இருக்கப் போவதும் இல்லை. 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தனியாக தான் ஆட்சி அமைப்பார். கூட்டணி ஆட்சி என்பதற்கு இடமே இல்லை என தம்பிதுரை கூறினார்.