tamilnadu epaper

ஏப்ரல் 20 தேசிய நாட்காட்டி (காலண்டர்) தினம்

ஏப்ரல் 20 தேசிய நாட்காட்டி (காலண்டர்) தினம்


காலண்டர் என்பது அன்றைய நாளின் சிறப்புக்களை, நல்ல நேரம் கெட்ட நேரங்களை நமக்கு தெரிவிக்கும் ஒரு வழிகாட்டி! ஒரு விழிப்புணர்வு! எனலாம்.


காலண்டர் இல்லாத வீடுகளே இருக்க முடியாது. தினம் தினம் பார்ப்பது, மாதம் முழுவதும் ஒரே பக்கத்தில் என எத்தனையோ படங்களுடன் மாட்டியிருப்போம்.


இது ஒருவித விளம்பரம் தான். அவரவர்கள் தங்கள் வியாபார நோக்கில் படங்கள் போட்டு இலவசமாகவும், விற்பனைக்கும் தருகின்றனர்.


தினம் கிழிக்கும்போது அன்றைய தினத்தின் தேதி, கிழமை, நக்ஷத்திரம், திதி, சந்திராஷ்டமம் உள்ள நக்ஷத்திரங்கள், நல்ல நேரம், கெட்ட நேரம், இராகு காலம், குளிகை என எண்ணற்ற விஷயங்களை உள்ளடக்கி இருக்கும்.  


திருமணங்கள், விழாக்கள், சுபநிகழ்ச்சிகள், அப காரியங்கள் எல்லாவற்றிற்கும் அடிப்படை தேவையாக இருக்கிறது.


இந்த காலண்டர் பொதுவாக ஆங்கிலத்திலும், அவரவர் தாய்மொழியிலும் அச்சடிக்கப்பட்டதை பயன் படுத்துவார்கள்.


பல்லி விழுந்த பலன், வாஸ்து போன்றவை கூட தெரிந்து கொள்ளலாம். தினசரி காலண்டரில் பின் பக்க அட்டையில் அரசு விடுமுறை நாட்கள், அனைத்து மத பண்டிகைகள், விரத நாட்களான ஏகாதசி, கிருத்திகை, சஷ்டி, சதுர்த்தி, சிவராத்திரி போன்ற அனைத்தும் தெளிவாக எழுதப்பட்டிருக்கும்.  


இப்போதெல்லாம் பழமொழிகள், தத்துவங்கள் மற்றும் 'கோட்'கள் போன்ற வாசகங்கள் நிறைத்த ஒற்றை வரி மெசேஜ் பார்ப்பது காலையில் ஒரு பூஸ்ட் தான்.


சிலர் பொழுது போக்காக பார்ப்பார்கள். ஏனெனில் தற்போது தொழில்நுட்பம் வளர்ச்சியால் கைப்பேசியிலேயே அனைத்தும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


சிலருக்கு காலண்டரை பார்த்தபின்தான் காபியே இறங்கும். ராசிபலனை பார்த்துவிட்டு கவலை கொள்வதும், சந்தோஷிப்பதும் ஒருவிதமான த்ரில்லிங்தான்.


ஒரு மினி பஞ்சாங்கமாகவே இருக்கும் இந்த காலண்டர் என்பது நாட்காட்டி மட்டுமல்ல. நமக்கு ஒரு வழிகாட்டியும் கூட.


வி.பிரபாவதி

மடிப்பாக்கம்.