சென்னை, ஏப். 17
சென்னையிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் அமெரிக்க மையம், பள்ளி மாணவர்களுக்காக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த இலவச கோடைக்கால பயிற்சிகளை ஏப்ரல் 21 முதல் மே 30 ந்தேதி வரை நடத்துகிறது.
8 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான இந்த பயிற்சி முகாமில், திங்கள் முதல் வியாழன் வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நேரடி மற்றும் செயல்முறை கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறும். வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு திரைப்பட காட்சியிடல் நடைபெறும். குறைவான இடங்களே உள்ளதால், பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்கள் தினசரி இடங்களுக்கு மின்னஞ்சல் ([email protected]) அல்லது வாட்ஸ்அப் (73056-76662) மூலம் முன்பதிவு செய்வது கட்டாயமாகும்.
மைக்ரோ பிட்ஸ் மற்றும் ஸ்னாப் சர்க்யூட்ஸ் போன்ற கோடிங் கருவிகள், மெர்ஜ் கியூப் ஆக்மென்டட் ரியாலிட்டி அனுபவங்கள், விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடிகள், 3டி பிரிண்டர் மற்றும் நாசா கருப்பொருள் லெகோ செட்கள் உள்ளிட்ட அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் கற்றல் உபகரணங்கள் மாணவர்களின் செயல்முறை கற்றலுக்கு உதவிகரமாக இருக்கும். மாணவர்கள் தினமும் ஒரு வேடிக்கையான மற்றும் கல்வி சார்ந்த வினாடி வினா போட்டியில் பங்கேற்று 3 டி அச்சிடப்பட்ட நினைவுப் பொருட்கள் மற்றும் நாசா ஸ்டிக்கர்கள் உள்ளிட்ட பரிசுகளை வெல்ல வாய்ப்பு உள்ளது.
இலவச திட்டம்
இந்த முன்னெடுப்பு குறித்து பேசிய சென்னையிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் பொது அரசியல் விவகாரங்களுக்கான அலுவலர் எரிக் அட்கின்ஸ், "அமெரிக்க மையம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) சார்ந்த துறையில் அமெரிக்காவின் சிறப்பை போற்றும் வகையில் இந்த கோடைக்கால பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இது கற்பனை, கண்டுபிடிப்பு மற்றும் அர்த்தமுள்ள கற்றலுக்கான நுழைவாயிலாக இருக்கும். அடுத்த தலைமுறை கண்டுபிடிப்பாளர்களை வளர்ப்பதற்கு இந்த இலவச திட்டத்தை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்" என்றார்.
சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரக வளாகத்தில் அமைந்துள்ள அமெரிக்க மையம், கற்றல், உரையாடல் மற்றும் ஊக்கத்திற்கான அடிப்படை கட்டமைப்புடன் திகழ்கிறது. இது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவை பல பத்தாண்டுகளாக வலுப்படுத்தி வருகிறது. 15,000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் ஏராளமான மல்டிமீடியா மற்றும் டிஜிட்டல் வளங்களைக் கொண்ட இந்த மையம், தினமும் காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை பொதுமக்களுக்காக திறந்திருக்கும்.