சென்னை, ஏப்.16
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து போட்டித் தேர்வுகளுக்காக தயாராகும் இளைஞர்களின் நலன் கருதி, கூடுதலாக சென்னை, அண்ணா நகரில் நவீன வசதிகளுடன் ஒரு அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்படும் என்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று தாக்கல் செய்த மனித வள மேலாண்மைத் துறையில் இந்தப் புதிய அறிவிப்பை வெளியிட்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் கூறியதாவது:
பவானிசாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் புதிய நவீன சமையற்கூடம் அமைத்தல், ஏற்கனவேயுள்ள பல்நோக்கு சமுதாய கூட்டத்தினை உணவுக் கூடமாக மாற்றி அமைத்தல் மற்றும் தலைகீழ் சவ்வூடு பரவல் இயந்திரம் (RO) அமைத்தல் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது. இத்தேவைகளை நிறைவேற்றுவதற்கு ரூபாய் 3 கோடி மதிப்புள்ள திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்படும்.
சென்னை, அண்ணா நிருவாக பணியாளர் கல்லூரியின் கணினி ஆய்வகம் ரூபாய் 55 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.
பவானிசாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையத்திற்கென புதிய காணொலி பகிர்வு தளம் தொடங்கப்படும். பொதுப் பணிகளில் கருணை அடிப்படையிலான பணிநியமனங்களை இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்துக்கு புதிய கணினிகள் செயல்பாடுகளை மேம்படுத்தும் பொருட்டு e-office திட்டத்தின் மூலம் தேவையான மூலதனச் செலவுகள் மேற்கொள்ளப்படும்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தின் பிரிவு அலுவலகங்களுக்கு புதிய குரல் பதிவு செய்யும் கருவிகள் ரூ. 6.32 லட்சம் செலவில் வழங்கப்படும்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தின் புலன் விசாரணை அலுவலர்களுக்கு 144 மடிக் கணினிகள் ரூ.99 லட்சம் செலவில் வழங்கப்படும்.
ஊழல் தடுப்பு மற்றும் கையூட்டு தொடர்பாக பொதுமக்கள் தடையின்றி கட்டணமில்லா தொலைபேசி மூலம் எளிதாக புகார் அளிக்க ஏதுவாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு உதவி மையம் முதல்வரின் முகவரி துறையின் கீழ் ரூ.53.75 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.