tamilnadu epaper

ஒரு மாற்றுத் திறனாளி நின்றாலும் பஸ்சில் ஏற்றிச்செல்ல வேண்டும் நடத்துநர்களுக்கு அரசு உத்தரவு

ஒரு மாற்றுத் திறனாளி நின்றாலும்  பஸ்சில் ஏற்றிச்செல்ல வேண்டும்  நடத்துநர்களுக்கு அரசு உத்தரவு


சென்னை, மே 4

அரசு பஸ்களில் மாற்றுத்திறனாளி பயணிகளை முறையாக நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும் என ஓட்டுநர்,நடத்துநர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும் பொழுது, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கடைபிடிக்க வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, மாற்றுத்திறனாளி பயணிகள் பேருந்திற்காக, பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பொழுது பேருந்தை முறையாக நிறுத்தி மாற்றுத்திறனாளி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். ஒரு மாற்றுத்திறனாளி பயணி பேருந்து நிறுத்தத்தில் நின்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும்.

ஓட்டுநர் பேருந்து நிற்பதற்கு என அறிவிக்கப்பட்டுள்ள பேருந்து நிறுத்தத்தில் தான் பேருந்தை நிறுத்த வேண்டும். பேருந்தை நிறுத்தத்திற்கு முன்பாகவோ /தள்ளியோ நிறுத்தி மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு ஏறி/இறங்க சிரமம் ஏற்படுத்துக்கூடாது. நடத்துனர் வேண்டும் என்றே பேருந்தில் இடமில்லை என்று கூறி பேருந்தில் ஏறும் மாற்றுத்திறனாளி பயணிகளை பேருந்தில் இருந்து இறக்கிவிடக் கூடாது. மாற்றுத்திறனாளிகளுக்கு என பேருந்தில் ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு மேல் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதை அறிவித்து, அவர்கள் அமர்ந்து பயணம் செய்ய உதவி செய்ய வேண்டும்.

கனிவுடன் பயணச்சீட்டு

மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்குரிய இருக்கையில் அமர்ந்தவுடன், கனிவுடன் பயணச்சீட்டுக்கள் வழங்கி அவர்கள் இறங்க வேண்டிய இடங்களில் பேருந்தினை நிறுத்தி, இறங்குவதற்கு மனிதாபிமான அடிப்படையில் நடத்துனர்கள் உதவி செய்வதுடன், அவர்கள் இறங்கும் வரை காத்திருந்து அவர்கள் இறங்கி கடந்து சென்ற பின்னர் பேருந்தினை நகர்த்த வேண்டும். சாதாரண பயணிகள் மாற்றுத்திறனாளிகள் இருக்கையில் அமர்ந்திருந்தால் அவர்களை கனிவுடன் மாற்று இருக்கைகளில் அமரச்செய்து, மாற்றுத்திறனாளிகளை அந்த இருக்கையில் அமரச் செய்ய வேண்டும்.

இருக்கை ஒதுக்கீடு

பேருந்து நிலையங்களில் பேருந்து புறப்படுவதற்கு முன், மாற்றுத் திறனாளிகளுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இருக்கையில், பேருந்து புறப்படும் வரையில் இதர பயணிகளை அமர வைக்காமல் வைத்திருந்து, ஒரு வேளை சாதாரண பயணிகள் அமர்ந்து இருப்பின், கடைசி நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏறினால், சாதாரண பயணிகளை மாற்றுத்திறனாளிகள் அமரும் பொருட்டு அவர்களுக்கான இருக்கையினை தர வேண்டும் என தெரிவித்து அமர வைக்க வேண்டும்.


மாற்றுத்திறனாளி பயணிகளிடம் அவர்கள் மணம் புண்படும் வகையிலோ, எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ. ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது. பேருந்தில் ஏறும் மாற்றுத் திறனாளி பயணிகளை கனிவுடனும், அன்புடனும் நடத்திட வேண்டும். மாற்றுத்திறனாளி பயணிகள் ஏறும் பொழுதும், இறங்கும் பொழுதும் கண்காணித்து ஓட்டுனருக்கு சமிக்கை செய்து பாதுகாப்பாக ஏற்றி இறக்க வேண்டும்.

இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.