புனைகதை வகைமையுள் ஒன்றான நாவலின் பரிமாணம் இன்றைக்கு வெவ்வேறு பொருண்மைத் தளங்களில் பயணிக்கத் தொடங்கி பெரு விருட்சமாய்க் கிளைத்து செழித்துக் கிடக்கிறது. நேரடியாக முதல் நாவல் என்று படைப்பாக்கத்தைத் தொடங்குகிறவர்கள்கூட தனித்துவம் மிக்கதாக நாவல் உருவாக்கத்தைத் தருகிறார்கள். இது நலமான ஒன்றாகும். வாசிக்கிற ஆர்வம் மட்டும் குறையாதிருந்தால் எண்ணற்ற புனைகதை வெளியில் நாவல்கள் முத்துக்குவியல்கள் போலக் குவிந்துகிடக்கின்றன. இன்றைக்கு நாவலின் உருவாக்கம் மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. மனம் அலுக்காது, சலிக்காது வாசிக்கலாம். அவ்வகையில் தற்போது ஸ்ரீமொழி வெங்கடேஷ் அவர்களின் ஓடிபி நாவல் வெளிவந்திருக்கிறது. எண்பது பக்கங்களில் தன்னுடைய கருத்தாக்கத்தை உள்ளடக்கி மனவெளியை விரிவுபடுத்திய ஒன்றாக இந்நாவல் உருவாக்கப்பட்டுள்ளது.
மிகக்குறைந்த பாத்திரங்கள் . மூன்றே பாத்திரங்கள் வாஞ்சிலிங்கம் எனும் கோடீசுவரர், முருகேசன் எனும் தேர்ந்த, திறனுள்ள புத்தக வாசிப்பாளி அவனின் நண்பன் சுற்றுலாத்தளத்தில் வழிகாட்டியாக (கைடு என்பதுதான் நாவலின் இறுதிவரை அவனுக்குப் பெயர்) வருகிறவர்கள். இவர்களைச் சுற்றியே இந்நாவலின் களமும் எல்லாமும் பின்னப்பட்டிருக்கின்றன.
கல்வி, அரசியல், சினிமா மூன்றின் நிலைப்பாடுகளும் இந்நாவலில் பேசப்பட்டுள்ளன. இவை ஒன்றுடன் ஒன்று இயைபுடையவை என்பதை நாவலாசிரியர் இந்நாவலில் உணர்த்துகிறார். மகாத்மா காந்தியடிகள், பண்டிட் ஜவகர்லால் நேரு, பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் மாமனிதர் ஜீவா போன்ற தன்னலமற்ற ஆளுமைகள் அரசியலில் ஓர் அற்புத அறத்தை விதைத்தவர்கள். அவர்கள் இயங்கிய காலத்தும் சரி இன்றைய காலத்தும் சரி இதற்கு எதிரான அரசியல் களங்களும் இயக்கப்பட்டன என்பது வரலாற்று உண்மை. இதையே இந்நாவலின் களத்திலும் உணரமுடிகிறது. ஒரு கட்சியின் உருவாக்கம் என்பது பல காரணங்களை உள்ளடக்கியது என்றாலும் அது எந்தளவில் தன்னைக் காலூன்றிக் கொள்கிறது என்பது முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய ஒன்று.
அரைசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும் என்பது இளங்கோ வடிகள் கூற்றாகும். இக்கூற்றை வாஞ்சிலிங்கத்தின் வாழ்வியல் நடவடிக்கைகள் மூலமாக நாவலாசிரியர் உணர்த்தி நிற்கிறார் எனலாம். சமூகத்தின் எதிரான செயல்பாடுகளில் என்றுமே அறம் பிறழ்வு இருக்கும் அது நல்ல பயனை விளைவிக்காது என்பதையும் நாவல் உணர்த்துகிறது. வாஞ்சிலிங்கம் தன்னுடைய நிறுவனங்களைக் காப்பாற்றுவதற்கு அரசியலைக் கையிலெடுக்கையில் அதற்குத் துணையாகக் கொண்டு வரப்பட்டிருக்கிற முருகேசன் தன்னளவில் சுயநலமாகப் பொருளாதாரத்தை வசப்படுத்தும் செயல்களை மேற்கொள்கிறான். அவனுக்குத் துணை அவன் நண்பன் கைடு. இப்படியான கதையில் திடீரென ஏற்படும் திருப்பம் எல்லோரையும் அதிர வைக்கிறது. இப்படி முடிந்துவிட்டால் என்ன செய்வது என்கிற திகைப்பும் நாவலை வாசித்து முடித்ததும் ஏற்படுகிறது.
இந் நாவலாசிரியர் தன்னுடைய அனுபவத்தைப் படம்பிடிப்பதுபோல இந்நாவலின் நெடுகிலும் காட்சிப்படுத்துகிறார். அறச்சீற்றமாகத் தன்னுடைய எண்ணத்தை நாவலின் இறுதியில் வைத்து முடிக்கிறார். இப்படியொரு பரிமாணம் இருப்பதும் அற அரசியலை நோக்கி சமூகத்தை வழிநடத்தும் அச்சத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என்கிற குறிப்பும் இருக்கிறது. மனச்சான்றுக்குப் பயந்தவன் நல்ல சமூகத்தை உருவாக்குவான் என்பதும் உணர முடிகிறது. நாவலின் முழுமையும் நாவலாசிரியரின் அனுபவத் தெறிப்புகள் நன்றாக உள்ளன. எளிமையாகச் சொல்லிப்போகிறார். குறைந்த பக்கங்களில் தன்னுடைய எண்ணங்களை வடிவமைத்து இந்நாவலை உருவாக்கியுள்ளார். அவருக்கு என்னுடைய மனம்நிறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாவல் விவரம் –
ஸ்ரீமொழி வெங்கடேஸ் – ஓடிபி நாவல்
ஸ்ரீமொழி பப்ளிகேஷன்ஸ், 21, ஏ, அரசன் குளத்தெரு, திருவாரூர்.
பேச. 9487258429.
-ஹரணி,
தஞ்சாவூர்.