கடலூர், ஏப்.17
வாழ்வில் வெற்றிபெற மாணவர்கள் கடின உழைப்புடன் தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.---
கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரி ஆண்டு விழாவில் பேராசிரியர்கள் எழுதிய புத்தகத்தினை வெளியிட்டு கல்லூரி அளவில் பல்வேறு துறைகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களுக்கு மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா புத்தகம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்ததாவது:
கல்லூரி கல்வியானது மாணவர்களின் எதிர்கால லட்சியத்திற்கான அடித்தளமாக அமைகின்றது. பள்ளிப் படிக்கும் போது நல்ல மதிப்பெண்களை பெற்றால் சிறந்த உயர்கல்வி பாடங்களை தேர்வு செய்ய முடியும். உயர்கல்வியில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் சிறந்த கல்லூரியில் நமது விருப்பப்படி பட்டப்படிப்பினை தேர்வு செய்ய முடியும். கல்லூரியில் கடினமாக விடாமுயற்சியுடன் கல்வி பயிலும் போது தங்களது இலட்சியங்களை எய்திட முடியும். மாணவர்கள் தொடர்ந்து விடாமுயற்சியுடன் கல்வி பயின்று கொண்டே இருந்தால் மட்டுமே வெற்றியினை தக்கவைத்து கொள்ள முடியும்.
மேலும், மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் போதே தனக்கு என ஒரு இலக்கை நிர்ணயித்து பயணித்தால்தான் வாழ்க்கையில் வெற்றியடைய முடியம். படிக்கும் போதே உங்களுடைய தனித்திறமை மற்றும் இலக்கு என்னவென்று திட்டமிட்டு செயல்படுவதோடு, இலக்கை அடையும் வரை எத்தனை முறை தோல்வி வந்தாலும் மனம் தளராமல் விடாமுயற்சியோடு கடினமாக உழைத்தால் தான் வெற்றி அடைய முடியும். மாணவர்கள் கல்வியை முடித்து பட்டம் பெறுவதோடு மட்டுமன்றி தங்கள் இலக்காக கொண்ட வேலைவாய்ப்பினையும் அடைய வேண்டும். எந்த பணியாக இருப்பினும் மென்மேலும் உங்கள் வளர்ச்சியை நீங்களே மேம்படுத்திக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் இராஜேந்திரன், பேராசிரியர்கள் சாந்தி, இராஜேந்திரன், ஜானகிராஜா உட்பட மாணவ,மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.