பெலிஸில் சிறிய ரக பயணிகள் விமானத்தை கத்தி முனையில் கடத்திய நபரை, பயணி ஒருவர் நடுவானில் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமெரிக்க நாடான பெலிஸ் எல்லையில் உள்ள கோரோஷல் எனும் சிறிய நகரில் இருந்து சுற்றுலா தலமான சான் பெட்ரோவுக்கு 14 பயணிகள் மற்றும் 2 விமானிகளுடன் சிறிய ரக விமானம் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென கத்திமுனையில் ஒருவர் விமானத்தை கடத்தினார். தன்னை இந்த நாட்டை விட்டு வெளியே கொண்டு சென்று விடுமாறு கோரிக்கை விடுத்தார். இதனால், விமானத்தில் பதற்றம் நிலவியது.
இந்நிலையில் பயணிகளில் ஒருவர், தன்னிடம் இருந்த துப்பாக்கியால், அந்த நபரை சுட்டுக்கொன்றார். இந்த சம்பவத்தால் விமானம் சுமார் 2 மணிநேரம் வானில் வட்டமடித்து கொண்டிருந்தது. பிறகு பொலிஸாருக்குத் தகவலளிக்கப்பட்டது.
இது குறித்து பொலிஸார் நடத்திய விசாரணையில், விமானத்தை கடத்த முயன்றது அமெரிக்காவைச் சேர்ந்த அகின்யேலா சாவா டெய்லர் என்பது தெரிய வந்தது. இந்த கடத்தல் சம்பவத்தின் போது, விமானி உட்பட 3 பேரை அவர் கத்தியால் குத்தியுள்ளார். அதன்பிறகு, சுற்றுலா பயணி தன்னிடம் இருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால், அந்த நபரை சுட்டுக் கொன்றது தெரிய வந்துள்ளது.