tamilnadu epaper

கருணாநிதி நினைவிடத்தை கோயில் கோபுரம்போல அலங்கரிப்பதா? - சேகர்பாபுவுக்கு பாஜக கண்டனம்

கருணாநிதி நினைவிடத்தை கோயில் கோபுரம்போல அலங்கரிப்பதா? - சேகர்பாபுவுக்கு பாஜக கண்டனம்

சென்னை:

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தை கோயில் கோபுரம் போல அலங்கரித்ததற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. சட்டப்பேரவையில் சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது.


முன்னதாக, சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் அமைச்சர் சேகர்பாபு மரியாதை செலுத்தினார். அப்போது, கோயில் கோபுரம்போல பூக்களால் நினைவிடம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதற்கு பாஜக தலைவர்க் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியுள்ளதாவது:


தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: தமிழகத்தின் அடையாளமான ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தை கருணாநிதியின் கல்லறை மீது வரைந்து வைத்திருக்கும் அறிவாலய அரசின் தவறான செயல் கண்டிக்கத்தக்கது. ‘பொட்டு வைக்காதே, திருநீற்றை அழி, நாமம் என்றால் பழி’ என இந்துக்களின் நம்பிக்கைகளையும், இந்து சமயங்களையும் திமுக அரசு இதுவரை இழிவு செய்து கேவலப்படுத்தியது போதாதா.


சமாதி மீது கோயில் கோபுரத்தை வரைந்து இந்து கோயில்களின் புனிதத்தையும் கெடுக்க வேண்டுமா. இந்துக்களின் நம்பிக்கைகளை சீண்டி பார்க்கும் மனப்போக்குடன் செயல்பட்டதற்கு அமைச்சர் சேகர்பாபு உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.


முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை: முதல்வர் குடும்பத்துக்கு யார் சிறந்த கொத்தடிமையாக இருப்பது என திமுக அமைச்சர்கள் இடையிலான போட்டியில், கருணாநிதி நினைவிடத்தை, கோயில் கோபுரம்போல அலங்கரித்து வரம்பு மீறி செயல்பட்டுள்ளார் அமைச்சர் சேகர்பாபு. தனது தொழில் போட்டிக்கு அறநிலையத் துறையை பயன்படுத்துவதை அவர் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.