tamilnadu epaper

கல்வி நிலையங்களில் அறிவியல்பூர்வமான கருத்துகளும் கல்வியும் மட்டுமே போதிக்கப்பட வேண்டும்

கல்வி நிலையங்களில் அறிவியல்பூர்வமான கருத்துகளும் கல்வியும் மட்டுமே போதிக்கப்பட வேண்டும்

சென்னை, ஏப்.17-


கல்வி நிலையங்களில் அறிவியல்பூர்வமான கருத்துகளும், கல்வியும் மட்டுமே போதிக்கப்பட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் பல்கலைக்கழகங்களில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களை மாணவர்களிடையே பரப்பக்கூடாது என்று துணை வேந்தர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்து வதற்காக பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களு டனான ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.


சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உள்பட அனைத்து பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வரவேற்று பேசினார். தலைமைச் செயலாளர் முருகானந்தம் குறிப்புரை ஆற்றினார்.


பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-


உயர்கல்வியில் நம்முடைய மொத்த சேர்க்கை விகிதம் 51.3 சதவீதமாக இருக்கிறது. இது தேசிய சராசரியைவிட இருமடங்கு அதிகம். தேசிய கல்விக்கொள்கையை நாம் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்திருக்கி றோம்.


புதிய துறைகளை


இணைக்க வேண்டும்


500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள், 31 புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. மேலும், என்.ஐ.ஆர்.எப். தரவரிசையில் முதல் 100 இடங்களில், 22 பல்கலைக்கழகங்களுடன் தமிழ்நாடு முன்னணியிலும் இருக்கிறது. அதோடு மனநிறைவு அடைந்துவிடக் கூடாது.


இந்தக் கூட்டம், ஒரு தொடக்கம்தான். அடுத்தக்கட்ட ஆலோசனைகளை நாட்டின் சிறந்த கல்வியாளர்கள் மற்றும் உயர்கல்வியில் உள்ள சிறந்த ஆலோசகர்களுடன் நடத்த இருக்கிறேன். நாம் வடிவமைக்க விரும்பும் எதிர்காலத் திட்டம், பொருத்தமான கல்வி, வேலைவாய்ப்பு, அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை ஆகிய 3 தூண்களை அடிப்படையாக கொண்டது. பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகளை மாற்றியமைக்க வேண்டும். டேட்டா சயின்ஸ், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மேம்பட்ட உற்பத்தி போன்ற புதிய துறைகளை பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும். மாணவர்கள் வெறும் பட்டதாரி களாக மட்டுமல்லாமல், புதிய சிந்தனையாளனாக உருவாக வேண்டும். அவர்களது திறன்களையும் மேம்படுத்த வேண்டும். நான் முதல்வன் திட்டம் இதுவரை 27 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. அதில் 1.19 லட்சம் பேர் திறன் மேம்பாடு மற்றும் வாழ்க்கை வழிகாட்டுதல் மூலம் வேலைவாய்ப்பை பெற்றிருக் கிறார்கள். வளாக வேலை வாய்ப்பை வலுப்படுத்தவும், முன்னணி நிறுவனங்களுடன் கூட்டணி அமைக்கவும், பயிற்சி திட்டங்களை விரிவாக்கவும் வேண்டும்.


தமிழ்ப் புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களால், அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேருவது கடந்த 3 ஆண்டுகளில் 30 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இதன்மூலம் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் கல்வியை அணுகக் கூடியதாக நாம் மாற்றி இருக்கிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கும், முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கும், விளிம்பு நிலை மக்களுக்கும் ஆதரவாக பல்கலைக்கழகங்கள் இருக்க வேண்டும்.


உயர்கல்வி ஆராய்ச்சிக்கான


பொற்காலம்


நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். உலகத்தில் இருக்கின்ற பல நாடுகளில் இருந்தும் நமது பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க மாணவர்கள் வரவேண்டும். ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கான மையங்களாக உயர்கல்வியின் உலகளாவிய தலைமையகமாக தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்கள் திகழவேண்டும் என்பதே என் கனவு.


காமராஜர் ஆட்சி காலம் - பள்ளிக் கல்வியின் பொற்காலம்; கருணாநிதியின் ஆட்சிக் காலம் - கல்லூரிக் கல்வியின் பொற்காலம்; இந்த திராவிட மாடல் ஆட்சி காலம் - உயர் கல்வி - ஆராய்ச்சிக் கல்விக்கான பொற்காலம் என்று வரலாற்றில் பேசப்படவேண்டும்.


உலகெங்கிலும் தமிழ்நாட்டை சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்கள் பல்வேறு துறைகளில் தலைமைப் பொறுப்பு களிலும், ஆராய்ச்சி பொறுப்புகளிலும் சிறந்து விளங்கி வருகிறார்கள். அவர்களது திறமையையும், அறிவையும் பயன்படுத்திக் கொண்டு, தமிழ் டேல்ண்ட்ஸ் பிளான் என்ற திட்டம் வகுக்கப்பட வேண்டும்.


அமெரிக்காவில் தற்போதுள்ள சூழ்நிலையால் அங்குள்ள தமிழகத்தின் திறமை வாய்ந்த பொறியாளர்கள், அறிவியல் அறிஞர்கள் தாய் நாடு திரும்பும் வாய்ப்பு ஏற்படக்கூடும். இந்த நேரத்தில் அவர்களது திறமையைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களுடன் இணைந்து ஆராய்ச்சிப் பணிகளிலும், உயர் கல்வி அமைப்புகளிலும் உலகத் தரத்தினைக் கொண்டு வர ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வழிவகைகள் செய்ய வேண்டும். கல்வி நிலையங்களில் அறிவியல்பூர்வமான கருத்துகளும், கல்வியும் மட்டுமே போதிக்கப்பட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அங்கு பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களையோ, கட்டுக்கதை களையோ தவறி யும் மாணவர்களிடையே பரப்பிடக் கூடாது. அறிவியல்ரீதியான உண்மை களையும், உயர்ந்த மானுடப் பண்புகளையும் போதிப்ப துடன், மாணவர்களிடையே சமத்துவத்தை யும், சமநீதியையும் கற்பிப்பதுதான் உங்களுடைய தலையாய கடமையாக இருக்க வேண்டும். பிரிவினையைத் தூண்டும் கருத்துகளுக்கோ, நடவடிக்கைகளுக்கோ கல்வி நிலையங்களில் இடமில்லை. இதில் எவ்விதமான சமரசத்தையும் ஏற்றுக்கொள்ள இயலாது.


இவ்வாறு அவர் பேசினார்.


துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களும் தங்கள் கருத்தை எடுத்துரைத்தனர். உயர் கல்வித் துறைச் செயலாளர் சமயமூர்த்தி நன்றி கூறினார்.