கவிஞர் கலியுகன் கோபி இந்தப் பெயர் தஞ்சை இலக்கிய வட்டத்தின் முக்கியமான வரலாற்றுப் பதிவான நிகழ்வுகளில் கவனங்கொள்ள வைக்கும் பெயர். அடிப்படை மனித நேயம், அறம், எதையும் எதிர்பாராமை, அடுத்தப் படைப்பாளியை மனதாரப் பாராட்டும் பண்பு இப்படி நேர்மறையாக சொல்ல நிறைய பண்புகள் இவரிடத்து இருக்கின்றன.
இவரின் இரு நூல்கள் ஒன்று கல்விக் கொடையாளர் காமராசர் மற்றொன்று செஞ்சூரியன் நெல்சன் மண்டேலா. இரண்டும் கவிதை நூல்கள். இரண்டு தலைப்புகளையும் பார்த்தாலே கலியுகன் கோபியின் படைப்புப் பண்பை எளிதில் புரிந்துகொள்ளலாம்.
உலகின் மனிதநேயத்தையும் மானுடப் பண்பையும் உழைப்பையும் நேர்மையையும் ஒழுக்கத்தையும் நல்ல செயற்பாடுகளையும் பதவிக்கும் பணத்திற்கும் ஒருதுளியும் மயங்காத தூய அரசியல் வாழ்வையும் தங்கள் வாழ்நாளின் இறுதிவரை வாழ்ந்த ஆகப்பெரும் ஆளுமைகள் பற்றி கவிஞர் கலியுகன் கோபி கவிதைகளில் பாடுகிறார் என்றால் அது இருவருக்கும் கவிஞர் செலுத்தும் நன்றிக்கடன் என்றே உறுதியாகச் சொல்லாம்.
இந்த சமூகத்தின் மேன்மைக்கு யார் உழைக்கிறார்களோ, யார் தங்களை அர்ப்பணிப்புச் செய்கிறார்களோ அவர்களைப் போற்றுதல் சமூகப் பொறுப்புள்ள அக்கறையுள்ள கவிஞனின் கடமையாக இருக்கிறது. அதைத்தான் கவிஞர் கலியுகன் கோபி செய்திருக்கிறார். ஆகவே இவ்விரு நூல்களும் சிறப்பான தொண்டு என்பதில் மிகையில்லை. கலியுகன் கோபிக்கு இந்தப் படைப்புலகம் கடமைப்பட்டிருக்கிறது. நான் கடமைப் பட்டிருக்கிறேன். என் மனமாரப் பாராட்டுகிறேன். பீடு நிறைந்து வாழ்க என்று வாழ்த்துகிறேன்.
முதல் நூல் காமராசர் பற்றி சொல் விளையாட்டே நிகழ்த்தியிருக்கிறார் கலியுகன் கோபி அவர்கள்.
கதராடை நாயகன்.. பற்றி வெள்ளையாய் பேசவந்தேன் (அதாவத தூய மனத்துடன்) பொய்ப்பூச்சு, போலிப் புகழாரம் இல்லை என்கிறார். காமராசர் அப்படித்தான். வெள்ளை உள்ள மனிதர். பொய்ப்பூச்சற்றவர். போலிப் புகழாரத்திற்கு மயங்காதவர்.
அரசியல் சோறுபோடாதென்று அறிவுறுத்தலுக்குப் பின்பும் அசையவில்லை மனம் என்கிறார்.
இதுதான் காமராசர். எதிர்பார்ப்புள்ளவனுக்குத்தான் எல்லாமும் வேண்டும். எதுவும் வேண்டாம் எல்லாம் தருகிறேன் என்று உழைத்தவர் காமராசர்.
அரசியல் பணிகளை மின்சாரமாக்கியவர் காமராசர்
கட்டிய வேட்டி கண்ணியம் கரைகாணா சொத்து.
சத்தியாக்கிரகி.. சிறைவாசம்.
முப்பது வயதில்.. அத்தனைப் பழிகள்.. மாசற்ற நிலவை
குற்றமற்றவரென்றது நீதிமன்றம்.. அப்படி வாழ்ந்தவர் காமராசர்.
வேதனைக் கற்களாய் வீசப்பட்டபோது வலியில்லை..
வளர்பிறை சிந்தனைகள்..
நலிந்தோரும் நாத்திகரும் வணங்கும் தெய்வம்..
கல்வி வளர்ச்சியில் எதிரணியிடமும் ஒத்த கருத்தோடு..
தன்னடக்கம் இவரிடம் அடக்கம்..
சிக்கல்களை எளிதில் பிரிக்கும் நுட்பம் வாய்ந்தவர்.
இல்லறம் துறந்தவர்.
அறவழி கண்ட கர்மவீரர்..
மாவட்டம் தந்த இமயமலை
கலங்கரை விளக்கு
அவ்வளவுதான் முத்து முத்தாய் சொற்களைத் தெரிவு செய்து அத்தனையும் கர்மவீரருக்குப் பொருந்துபவன. பொருத்திக் கவிதைகளில் தன் நன்றிக்கடனைச் செலுத்துகிறார். அனைவரும் வாசிக்கலாம். எப்போதும் வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் வாசிக்கலாம்.
இரண்டாவது நூல் நெல்சன் மண்டேலா..
உதயத்தில் கருஞ்சூரியன்
கருப்பு மல்லிகை
அக்னிப் பயணம் கனல் தெறித்தது.
தொழிலாளியாய்தொடங்கிய வாழ்வு.
கொள்ளையடிக்காத தலைவன். தலைமறைவு வாழ்வு.
நெருப்புத் துண்டாய் நாயகர் வெளிவந்தார்.
இன்னா செய்தார் நாண நன்னயம் செய்தார்.
புரட்சித் திட்டங்களால் புதுமைகளை நிரப்பினார்.
தென்னாப்பிரிக்க இமயம்.
வெகு அழகாக மண்டேலாவின் வாழ்வை ரத்தினக் கற்கற் பதித்த மகுடம்போல ஒளிரவிட்டிருக்கிறார் இச்சிறுநூலில். பெரும் நூல் எழுதுதல் எளிது. சிறிதும் நுட்பமும் இணைந்து எழுதுவது கடினம். அதையும் எளிமையாக எழுதித் தந்திருக்கிறார் கலியுகன் கோபி. மனம் நிறை வாழ்த்துகள்.
இரண்டு நூல்களும் இரண்டு புதையல்கள்.
கிடைத்தோருக்கு வாழ்வின் வெற்றி.
-ஹரணி,
தஞ்சாவூர்-2