tamilnadu epaper

செல்லூர் ராஜுக்கு, முன்னாள் ராணுவத்தினர் கண்டனம்

செல்லூர் ராஜுக்கு, முன்னாள் ராணுவத்தினர் கண்டனம்

சென்னை,


காரைக்குடியில் உள்ள முப்படை முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம் தலைவர் திருச்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சமீபத்தில் ராணுவ வீரர்களை பற்றி பேசியது தமிழகம் முழுவதும் முன்னாள் ராணுவத்தினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது மாபெரும் தெர்மோகோல் கருத்துகளையே மக்கள் இன்று மறந்திருக்காத நிலையில் மீண்டும் ஒரு பேரறிவு பூர்வமான கருத்தை சொல்லி அவரை அவரே தரம் தாழ்த்தி கொண்டு இருக்கிறார்.


பிரதமர் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்கள் ராணுவத்திற்கு தேவையானவற்றை முப்படை அதிகாரிகள் பரிந்துரை செய்வதை வாங்கி கொடுத்தாலும் அவை தானாக இயங்குமா? எதிரிகளின் தாக்குதலுக்கு மத்தியில் தன்னுயிரை துச்சமாக மதித்து தன் நாடு காக்க எதிரிகளின் இலக்கை துல்லியமாக குறிவைத்து துவம்சம் செய்வது ராணுவத்தாரே என்பதை அறியாத அப்பாவியாக இருக்கிறார்.


செல்லூர் ராஜு சொல்வதுபோல, ஆயுதங்களை கொடுத்துவிட்டால் போதுமா? அந்த எந்திரங்கள் தானாக இயங்கி போரில் வெற்றி பெறலாம் என்றால் ராணுவம் எதற்கு கலைத்து விடலாமா? செல்லூர் ராஜு, தம்மால் புரிந்து கொள்ள முடியாத விஷயத்தில் பேசும் கருத்துகளால், தன்னையும் தன் குடும்பத்தாரையும் வருத்தி கொண்டு இந்த நாட்டினையும், நாட்டு மக்களையும் காத்து நிற்கும் காவல் தெய்வங்களை புண்படுத்துகிறார்.


மக்கள் அவரை பார்த்து கேலியாக சிரிக்கும் ஒரு நிலையை ஒரு மாநில அமைச்சராக இருந்தவர் உருவாக்கிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். அவரது சிறுபிள்ளை தனமான கருத்துகளுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.