ஒருமுறை ஒலிம்பியாவில் நடந்த விளையாட்டுப் போட்டியைக் காண்பதற்குச் சென்றிருந்தார் பிளேட்டோ. இவர் கிரேக்க நாட்டின் மேதை என்பதோடு, கால, காலமாக, அங்கிருந்த பல மூடத்தனங்களை அகற்றி பகுத்தறிவை விதைத்தவர். சாக்ரடீஸின் தலை சிறந்த மாணவரான இவர். ஏதென்ஸ் நகரில் ஒரு அறிவார்ந்த பல்கலைக் கழகத்தையும் நிறுவியிருந்தார்.
ஒலிம்பியாவில் ஒரு விடுதியில் அவருடன் வேறு இருவரும் தங்கியிருந்தனர். அவர்கள் பிளேட்டோவின் தோற்றத்தையும், உடைகளையும் பார்த்து அவரிடம் நட்பு பாராட்டவோ, அவரைப் பற்றி விசாரிக்கவோ விரும்பவில்லை. ஆனாலும் அவ்வப்போது ஏதாவது பொது விஷயத்தைப் பற்றி மட்டும் கேட்டுத் தெரிந்து கொள்வர்.
விளையாட்டுப் போட்டிகள் முடிந்ததும், பிளேட்டோ ஏதென்ஸ் புறப்பட்டார். அந்த இருவரும் “நாங்களும் ஏதென்ஸ்தான் செல்கிறோம்!” என்று கூறி அவருடனே பயணித்தனர். ஏதென்ஸ் நகரை அடைந்ததும், அவர்களிருவரும் பிளேட்டோவிடம் “எங்களுக்கு ஏதென்ஸ் நகரத்தை சுற்றிக் காட்ட முடியுமா?” என்று கேட்க, பிளேட்டோவும் உதவினார்.
கடைசியில் அவர்கள், “எங்களுக்கு இவ்வளவு தூரம் உதவியதற்கு நன்றி...இறுதியாய் ஒரே ஒரு உதவி...அறிஞர்.பிளெட்டோ அவர்கள் உருவாக்கியிருக்கும் பல்கலைக் கழகத்திற்கு எங்களைக் கூட்டிப் போக முடியுமா?” என்று கேட்டனர். பிளேட்டோவும் ஒப்புக் கொண்டு அழைத்துச் சென்று காட்டினார். அந்தப் பல்கலைக் கழகத்தின் ஒவ்வொரு பகுதியையும் பர்த்துப் பார்த்து அதிசயித்த அவர்கள், “இப்படிப்பட்ட பல்கலைக் கழகத்தை உருவாக்கிய அந்த அறிஞரை ஒரே ஒரு முறை தூரத்தில் இருந்து பார்த்தால் கூட போதும்! எங்கள் பிறவிப்பயன் முடிந்து விடும்!...முடியுமா?” என்று பிளேட்டோவிடமே கேட்டனர்.
மெலிதாய்ச் சிரித்த பிளேட்டோ, “ந்ண்பர்களே!...ஒலிம்பியாவிலிருந்து இந்த நிமிடம் வரை நீங்களிருவரும் பிளேட்டோவுடன்தான் இருக்கிறீர்கள்!...இனி வேறு எந்த பிளேட்டோவை நான் உங்களுக்குக் காட்டுவது?” என்று கேட்டார்.
“இவரா அறிஞர் பிளேட்டோ?” என்று அவர்கள் அவர்கள் சந்தேகித்த போது, அங்கிருந்த சில மாணவர்கள் பிளேட்டோவைப் பார்த்து விட்டு ஓடி வந்து அவர் காலில் விழுந்து ஆசி வாங்க,
ஆடிப் போயினர் அவர்கள் இருவரும்.
(சேதி தொடரும்!)