சேலம், ஏப்.19-
இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளியாக நேற்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி சேலத்தில் சிலுவை பாடு நிகழ்ச்சி நடந்தது. அரிசிப்பாளையம் தூய மரியன்னை பள்ளி வளாகத்திலிருந்து சிலுவைப்பாதை பயணம் துவங்கியது. வழியெங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் சாதிமத வேறுபாடின்றி பார்வையிட்டு இயேசுபிரானை தொழுதனர்.
இந்த சிலுவை பாடு புனித பயணத்தின் போது 12 இடங்களில் உயிர் ஓவிய நிகழ்ச்சி நடத்தப்பட்டு இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வு நினைவு கூறப்பட்டது. சிலுவையை சுமந்தபடி இயேசுபிரான் முள்கிரீடம் அணிவித்து சாட்டையால் அடித்து துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட காட்சிகள் சிலுவை பாடு பயணத்தில் தத்ரூபமாக இடம்பெற்றன. நான்கு ரோடு அருகே உள்ள குழந்தை இயேசு பேராலயத்தில் சிலுவை பாடு பயணம் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து குழந்தை இயேசு பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன.