ஜெட்டா: சவுதி ஸ்மாஷ் டேபிள் டென்னிசில் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி தோல்வியடைந்தன.
சவுதி அரேபியாவில் சர்வதேச 'சவுதி ஸ்மாஷ்' டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஆயிஹா, சுதிர்த்தா ஜோடி, தென் கொரியாவின் நயேயியாங், ஜப்பானின் மியு நாகசாகி ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 11-6 என கைப்பற்றிய இந்திய ஜோடி அடுத்த செட்டை 9-11 என இழந்தது. மூன்றாவது செட்டை 12-10 என வென்றது. கடைசி இரு செட்டில் (6-11, 8-11) ஏமாற்றியது. முடிவில் இந்திய ஜோடி 2-3 என்ற செட்டில் போராடி தோற்றது.
ஆண்கள் சறுக்கல்
ஆண்கள் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் மானவ் விகாஷ் தக்கார், மனுஷ் ஷா ஜோடி, இரண்டாவது சுற்றில் சுலோவாகியாவின் லுபோமிர், ஹாங்காங்கின் பால்டுவின் சன் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை கடும் போராட்டத்துக்குப் பின் இந்திய ஜோடி 20-18 என கைப்பற்றியது. அடுத்த இரு செட்டுகளை 4-11, 6-11 என கோட்டை விட்டது.
பின் நான்காவது செட்டை 11-9 என வசப்படுத்திய போதும், கடைசி செட்டை 7-11 என நழுவவிட்டது. முடிவில் இந்திய ஜோடி 2-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது.