சென்னை:
திருவாலங்காடு அருகே ரயில் தண்டவாளப் பகுதியில் இருவேறு இடங்களில் போல்ட், நட்டுகள் கழற்றப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, ரயில் தண்டவாளத்தை தீவிரமாக கண்காணிக்க தண்டவாள பராமரிப்பாளர்களுக்கு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை - அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ரயில் நிலையத்துக்கும் ராணிப்பேட்டை மாவட்டம் மோசூர் ரயில் நிலையத்துக்கும் இடையே அரிசந்திராபுரம் என்ற இடத்தில் சென்னை நோக்கி விரைவு ரயில்கள் செல்லும் தண்டவாளத்தில் கடந்த 25-ம் தேதி அதிகாலை திடீரென சிக்னல் துண்டிக்கப்பட்டது ரயில்வே ஊழியர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து, ரயில்வே பாயின்ட்மேன், சிக்னல் துண்டிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டபோது, அந்த தண்டவாள இணைப்பு பகுதியில் போல்ட், நட்டுகள் மர்ம நபர்களால் கழற்றப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதவிர, அரிசந்திராபுரம் பகுதியில் சென்னையிலிருந்து அரக்கோணம் நோக்கி மின்சார ரயில்கள் செல்லும் தண்டவாளத்திலும் ஒரு போல்ட்டில் நட்டுகள் மட்டும் மர்ம நபர்களால் கழற்றபட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, அரக்கோணம் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களில் ரயில் தண்டவாளத்தை தீவிரமாக கண்காணிக்க தண்டவாள பராமரிப்பாளர்களுக்கு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட சுற்றறிக்கை: ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு செல்லும் தண்டவாளப் பாதை, தண்டவாளத்தில் பிரிந்து மற்றொரு தண்டவாளத்துக்கு செல்லும் பகுதி, திரும்பும் பகுதி, பாலங்கள், சுரங்கப்பாதை உட்பட பல்வேறு இடங்களில் ரயில் தண்டவாளத்தை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ஏதேனும் அசாதாரண நிலை இருக்கும் இடத்தை அடுத்த ஒரு மாதத்துக்கு ரயில் தண்டவாளம் பராமரிப்பாளர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.