tamilnadu epaper

தனக்கு 140 வயது என்கிறார் ஆப்கானியர்: ஆவணங்களை சரிப்பார்க்கிறது தலிபான் அரசு

தனக்கு 140 வயது என்கிறார் ஆப்கானியர்: ஆவணங்களை சரிப்பார்க்கிறது தலிபான் அரசு

காபூல்:

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒருவர், தனக்கு 140 வயதாகிறது என தெரிவித்துள்ளார். அவர் கூறும் தகவல்களை தலிபான் அரசு சரிபார்த்து வருகிறது.


உலகிலேயே மிக நீண்ட நாள் வாழ்ந்தவர் என்ற சாதனையை படைத்தவர், ஐரோப்பிய நாடான பிரான்சைச் சேர்ந்த ஜேன் லுாயிஸ் கல்மென்ட் என்ற பெண்.


கின்னஸ் சாதனை

பிரான்சின் புரோவென்ஸ் மாகாணத்தில் உள்ள ஏர்லெஸ் என்ற இடத்தில், 1875, பிப்., 21-ல் பிறந்த அவர், 1997 ஆகஸ்டில் உயிரிழந்தார். அவர், மொத்தம் 122 ஆண்டுகள் மற்றும் 164 நாட்கள் உயிர் வாழ்ந்தது, தற்போதைய கின்னஸ் சாதனையாக உள்ளது.


உலகம் முழுதும் பலரும் இது போன்று நீண்ட காலம் உயிர் வாழ்ந்து வருவதாகக் கூறி விண்ணப்பிப்பதாலும், தகுந்த ஆவணங்கள் இல்லாததால், அதை கின்னஸ் அமைப்பு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.


இந்நிலையில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அக்யூல் நசீர், தனக்கு 140 வயதாகிறது என்றும், 1880களில் பிறந்ததாகவும் தெரிவித்துள்ளார். அந்நாட்டின் கிழக்கு கோஸ்ட் மாகாணத்தில் வசிக்கும் அவரிடம், பிறந்த தேதி தொடர்பான ஆவணங்கள் எதுவும் இல்லை.


பேரன், கொள்ளுப்பேரன் என பல தலைமுறை சொந்தங்களுடன், மிகப்பெரிய குடும்பமாக நசீர் வசிக்கிறார். அவரது பேரன்களில் ஒருவரான கையல் வாசீர், 50, என்பவருக்கே பேரன்கள், பேத்திகள் உள்ளனர். 

நசீர் கூறுகையில், “கடந்த 1919-ல் நடந்த ஆங்கிலோ -- ஆப்கன் போரை நேரில் பார்த்திருக்கிறேன். என் 30வது வயதில் நடந்த அந்த போரில், ஆங்கிலேயப் படைகளை ஆப்கன் மன்னர் அமானுல்லா கான் தோற்கடித்தார்.


சிறப்புக்குழு

''இதையடுத்து, 'ஆர்க்' எனப்படும் மன்னரின் அரண்மனையில் வெற்றி விழா நடந்தது. அதில், நானும் பங்கேற்று விருந்து சாப்பிட்டேன். ஏராளமான முக்கிய தலைவர்கள் அதில் கலந்து கொண்டனர். அவர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை,” என்றார்.


தனக்கு, 140 வயது என நசீர் கூறுவது உண்மையா என ஆய்வு செய்ய, ஆப்கனில் ஆளும் தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. கோஸ்ட் மாகாண அரசு செய்தித் தொடர்பாளர் முஸ்தபர் குர்பாஸ் கூறுகையில், “நசீரின் வயதை சரிபார்ப்பதற்காக, சிவில் பதிவுத் துறையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.


“நசீரின் வயதை சரிபார்ப்பதற்காக, சிவில் பதிவுத் துறையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.


''ஆவணங்கள் அல்லது மதிப்பீடுகள் வாயிலாக அவரது வயது உறுதியானால், அவரை உலகின் மிக வயதான நபராக பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுப்போம்,” என்றார்.


நசீர் கூறுவது உண்மையாக இருந்தால், உலகிலேயே மிக அதிக காலம் வாழ்ந்த மனிதர் என்ற வரலாற்று சாதனையை படைப்பார்.