tamilnadu epaper

தர்பூசணியில் எங்கும் ரசாயன கலப்பு இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தர்பூசணியில் எங்கும் ரசாயன கலப்பு இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை:

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் எங்கும் தர்பூசணியில் ரசாயனம் கலக்கப்படவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்ட விவசாய நலச்சங்கத் தலைவரான எம்.வெங்கடேஷன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ``கோடை காலத்தில் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் ஈட்டித்தரும் தர்பூசணி பழங்களில் ரசாயனம் கலக்கப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தர்பூசணி குறித்து தவறான பிரசாரம் மேற்கொண்டனர்.


இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 16 ஆயிரம் ஏக்கரில் தர்பூசணி விவசாயம் செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரசாரத்தால் ஒரு கிலோ ரூ.2-க்கு விற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், தர்பூசணி குறித்து நல்லமுறையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளவும், பொய்யான தகவல்களை பரப்பிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். அத்துடன் தர்பூசணி பழங்களை தமிழக அரசே கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்'' எனக் கோரியிருந்தார்.


இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.கேசவன் ஆஜராகி வாதிட்டார். அப்போது அரசுத் தரப்பில், ``தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் எங்கும் தர்பூசணியில் ரசாயனம் கலக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. அது தொடர்பாக பொதுமக்களிடம் நேர்மறையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது'' என தெரிவிக்கப்பட்டது.


அதையடுத்து நீதிபதி, தர்பூசணியில் ரசாயனக் கலவை இல்லை என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் தமிழக அரசு விளம்பரம் செய்ய வேண்டும். மனுதாரரின் குற்றச்சாட்டுகள் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விளக்கமளிக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூன் 9-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.