சென்னை:
திமுக ஆட்சி விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரனை வாழ்த்தி வரவேற்கும் நிகழ்ச்சி, சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மூத்ததலைவர் ஹெச்.ராஜா, மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி, மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் மற்றும் விஜயதரணி, அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு, நயினார் நாகேந்திரனுக்கு செங்கோலை வழங்கி வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: பாஜகவின் சொத்து அண்ணாமலை. நாம் அனைவரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம் என்பதுதான் சரியாக இருக்கும். திமுக அரசு தன்னைத் தானே அழித்துக் கொண்டிருக்கிறது. பொன்முடியின் பேச்சு அதற்கு உதாரணம்.
அவர் பெண்களை எவ்வளவு கேவலமாக பேசினார் என்பது அனைவருக்கும் தெரியும். அவரது பேச்சால் தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. பொன்முடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தியை கண்டித்து தமிழக பாஜக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்.திமுக அரசு விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும். ஒவ்வொருவருக்கும் இந்த பொறுப்பு இருக்கிறது. இதற்காக அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும். கூட்டணி குறித்தும் எத்தனை இடங்களில் போட்டி என்பது குறித்தும் யாரும் கவலைப்பட வேண்டாம். அதையெல்லாம் அமித் ஷா பேசி முடிவெடுத்துக் கொள்வார்.
இன்று 4 எம்எல்ஏ-க்கள் பாஜகவில் இருக்கிறார்கள். அடுத்த தேர்தலில் பாஜகவின் எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார். தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, “நாடாளுமன்றத்தை அலங்கரிக்கும் தமிழர்களின் செங்கோல், விரைவில் தமிழக சட்டப்பேரவையையும் அலங்கரிக்கும். பிரதமர் மோடி, அந்த செங்கோலை நிறுவுவார்.
அதிமுக - பாஜக கூட்டணிதான் 2026-ல் ஆட்சி அமைக்கப் போகிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஆட்சி, பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத ஆட்சி, பெண்களின் வாக்குகளாலேயே வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்” என்றார்.