tamilnadu epaper

துவங்குகிறது கிராண்ட் செஸ் *பிரக்ஞானந்தா, குகேஷ் பங்கேற்பு

துவங்குகிறது கிராண்ட் செஸ் *பிரக்ஞானந்தா, குகேஷ் பங்கேற்பு

வார்சா: பிரக்ஞானந்தா, குகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்கும் கிராண்ட் செஸ் தொடர் இன்று துவங்குகிறது.

கிராண்ட் செஸ் தொடரின் 9வது சீசன் அட்டவணை வெளியானது. போலந்து, ருமேனியா, குரோஷியா, அமெரிக்காவில் இரண்டு என இந்த ஆண்டு முழுவதும் மொத்தம் 5 தொடர் நடக்கும். உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் இதன் முடிவில் ஒட்டுமொத்த புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் வீரர் கோப்பை கொண்டு செல்வார்.

ஒவ்வொரு தொடரிலும் ரேபிட், பிளிட்ஸ் என இரு முறையில் போட்டிகள் நடக்கும். சர்வதேச ரேட்டிங், போட்டியில் வெளிப்படுத்தும் திறமை, விளையாட்டு உணர்வுடன் நடந்து கொள்ளுதல் என பல்வேறு திறமை அடிப்படையில் இதில் பங்கேற்கும் 'டாப்-9' வீரர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இந்தியாவின் பிரக்ஞானந்தா, குகேஷ் என இருவரும் இடம் பிடித்தனர். பிரான்சின் வாசியர், அமெரிக்காவின் பேபியானோ காருணா, ரஷ்யாவின் நேபோம்னியாட்சி உள்ளிட்டோர் களமிறங்க உள்ளனர். இந்திய வீரர்கள் அர்ஜுன், விதித் சந்தோஷ் குஜ்ராத்தி 'வைல்டு கார்டு' (சிறப்பு அனுமதி) அனுமதி பெற்றுள்ளனர். இந்த சீசனின் முதல் தொடர் இன்று போலந்தில் துவங்குகிறது.

சமீபத்தில் கேண்டிடேட்ஸ் தொடரில் சாதித்த குகேஷ், உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ரூ. 12.52 கோடி

கிராண்ட் செஸ் தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ. 12.52 கோடி. ஒவ்வொரு போட்டியிலும் வெல்லும் வீரர்களுக்கு ரூ. 2.92 கோடி (ரேபிட்), ரூ. 1.46 கோடி (பிளிட்ஸ்) பரிசு கிடைக்கும்.