tamilnadu epaper

தோட்டத்து வீடுகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு- பி.ஏ.பி., கால்வாயில் இரவு நேரம் தீவிர ரோந்து

தோட்டத்து வீடுகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு- பி.ஏ.பி., கால்வாயில் இரவு நேரம் தீவிர ரோந்து

திருப்பூர்:


ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு, மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி ராமசாமி மற்றும் பாக்கியம் ஆகிய இருவரும் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டனர்.


இதுகுறித்து சிவகிரி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்த தம்பதி அணிந்திருந்த 12 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதும், நகைகளுக்காக இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.


ஈரோடு கொலை சம்பவம் போன்று பல்லடம் சேமலைகவுண்டம்பாளையத்திலும் சில மாதங்களுக்கு முன்பு ஒரே குடும்பத்தில் தந்தை,தாய், மகன் ஆகியோரை தோட்டத்து வீட்டில் வைத்து மர்மநபர்கள் கொலை செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.


தோட்டத்து வீடுகளில் வசிப்பவர்களை குறி வைத்து கொலை சம்பவம் நடைபெற்று வருவதால் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் தோட்டத்து வீடுகளில் போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். 44 போலீசார் அடங்கிய 22 குழுக்கள் தோட்டத்து வீடுகள் அமைந்துள்ள பகுதியில் துப்பாக்கி ஏந்தியவாறு ரோந்து சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் பி.ஏ.பி. கால்வாய் வழியாக கொள்ளையர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் அங்கேயும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தோட்டத்து வீடுகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும். தனியாக பாதுகாப்பற்ற முறையில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று வசிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.