tamilnadu epaper

நாக்பூர் வன்முறையில் பெண் காவலரிடம் கலவரக்காரர்கள் தவறாக நடக்க முயற்சி: எஃப்ஐஆர் தகவல்

நாக்பூர் வன்முறையில் பெண் காவலரிடம் கலவரக்காரர்கள் தவறாக நடக்க முயற்சி: எஃப்ஐஆர் தகவல்

நாக்பூர்:

அவுரங்கசீப் கல்லறையை அகற்றக் கோரி நாக்பூர் நகரில் நடந்த போரட்டத்துக்குப் பின்பு ஏற்பட்ட வன்முறையின்போது, கலவரத்தில் ஈடுபட்டவர்களில் சிலர், பெண் காவலர் ஒருவரைத் தவறான முறையில் தொட்டு, அவரது ஆடையைக் களைய முயன்றதாக கூறப்படுகிறது. இந்தக் கலவரம் தொடர்பாக 51 பேரைக் கைது செய்து அவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 57 பிரவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இது குறித்து போலீஸார் கூறுகையில், "நாக்பூர் வன்முறை தொடர்பாக மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் கணேஷ்பெத் காவல் நிலைத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், நகரின் பஹல்தர்புரா சவுக்கில் சிலர் ஒன்று கூடி போலீஸாரைத் தாக்கத் தொடங்கினர். அவர்கள் போலீஸார் மீது கற்களையும் பெட்ரோல் குண்டுகளையும் வீசினர்.


அவர்கள் இருளில் கலவரத் தடுப்பு பிரிவைச் சேர்ந்த (ஆர்சிபி) பெண் காவலர் ஒருவரை தவறாகத் தொட்டு, அவரின் உடையைக் களைய முயன்றனர். அந்தப் பெண் காவலருக்கு எதிராக அவதூறு வார்த்தைகளைக் கூறி, ஆபாசமான சைகைகளைக் காட்டினர். கலவரக்காரர்கள் பிற பெண் காவலர்களை ஆபாசமாகத் திட்டி தாக்கத் தொடங்கினர் என முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.


முன்னதாக, மகாராஷ்டிரா மாநிலம் மத்திய நாக்பூரின் மஹால் பகுதியில் உள்ள சிட்னிஸ் பூங்கா திங்கள்கிழமை 7.30 மணியளவில் கலவரம் ஏற்பட்டது. சத்ரபதி சம்பாஜி மாவட்டத்தில் உள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்றக் கோரி இந்து அமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், புனித நூலான குரான் எரிக்கப்பட்டதாக பரவிய வதந்தியைத் தொடர்ந்து இந்தக் வன்முறை ஏற்பட்டது. அப்போது கலவரக்காரர்கள், போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறையைத் தொடர்ந்து நகரின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது. போலீஸார் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.