tamilnadu epaper

பழுவேட்டரையர்களின் தலைநகரான பழுவூர்க்கு பாரம்பரிய பயணம் மேற்கொண்ட வரலாற்று ஆர்வலர் குழுவினர்!

பழுவேட்டரையர்களின் தலைநகரான பழுவூர்க்கு  பாரம்பரிய பயணம் மேற்கொண்ட வரலாற்று ஆர்வலர் குழுவினர்!



கீழையூர் இரட்டைக் கோயில்கள்


திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு அரியலூர் கீழையூர் இரட்டைக் கோயில்கள் பாரம்பரிய பயணத்தை யோகா ஆசிரியர் விஜயகுமார், முஹமதுசுபேர், சந்திரசேகரன், கமலக்கண்ணன், அரிஸ்டோ வசந்தகுமார் உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.


பழுவூர் கோயில்கள் கீழப்பழுவூர் (கிழக்கில் கீழ் பகுதி), மேலப்பழுவூர் (மேற்கில் மேல் பகுதி) மற்றும் கீழையூர் என மூன்று பிரிவுகளில் காணப்படுகின்றன.

இந்த மூன்று கோயில்களும் ஜமதக்னி முனிவராலும், அவரது புகழ்பெற்ற மகனும், கோடரி ஏந்தியவரும், விஷ்ணுவின் ஆறாவது அவதாரமுமான பரசுராமராலும் வழிபடப்பட்டதாகக் கூறப்படுகிறது. 


கீழையூர் இரட்டைக் கோயில்கள் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தின் கீழையூர் புறநகர்ப் பகுதியில் ஒரே இடத்தில் அமைந்துள்ள இரு சிவன் கோயில்களாகும். கீழையூர், சோழ மன்னர்களின் சிற்றரசர்களாகிய பழுவேட்டரையர்களின் தலைநகரான பழுவூரின் ஒரு பகுதியாகும்.


திருச்சியிலிருந்து அரியலூர் அல்லது ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில், அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் வட்டத்தில் தஞ்சாவூரிலிருந்து 35 கி.மீ. வடக்கிலும், அரியலூரிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் உள்ள கீழையூர் மேலப்பழுவூருக்கு சற்று முன்பாக அமைந்துள்ளது. அவ்வூரில் இக்கோயில்கள் அமைந்துள்ளன.


மேற்கு நோக்கிய நிலையில் இக்கோயில்களின் முதன்மை நுழைவாயில் உள்ளது. தென்மேற்கு திசையையொட்டி ராஜகோபுரம் உள்ளது. ராஜகோபுரத்தின் வெளிப்புறம் இரு புறத்திலும் துவாரபாலகர்கள் உள்ளனர்.அவனி கந்தர்வ ஈசுவர கிருகம் என்றழைக்கப்படுகின்ற இக்கோயில்களின் வட புறத்தில் உள்ள கோயில் வடவாயில் ஸ்ரீகோயில் சோழிச்சரம் என்று அழைக்கப்படுகிறது. தென் புறத்தில் உள்ள கோயில் தென்வாயில் ஸ்ரீகோயில் அகத்தீசுவரம் என்று அழைக்கப்படுகிறது. பழுவேட்டரையர்கள் சிற்றசர்களில் குமரன்கண்டன் மற்றும் குமரன்மறவன் காலத்தில் இக்கோயில்கள் கட்டப்பட்டன. இக்கோயில் வளாகத்தில் இரண்டு சிவன் கோயில்களுடன் சில பரிவாரக் கோயில்களும் காணப்படுகின்றன.


ஒரு கோயிலுக்கு மூலவரான இறைவன் அகஸ்தீஸ்வரர் இறைவி அபிதகுஜாம்பிகை தனித்தனிச் சன்னதிகளில் உள்ளனர். மற்றொரு கோயிலுக்கு மூலவரான சோழீஸ்வரர் சன்னதியில் இறைவி மனோன்மணி உள்ளார்.


சிற்பக்கலையின் எடுத்துக்காட்டாக இரட்டைக்கோயில்களைக் கூறலாம். தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில், புள்ளமங்கை ஆலந்துறைநாதர் கோயில், கொடும்பாளூர் மூவர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களை இக்கோயில்கள் நினைவுபடுத்துகின்றன. நுட்பமான சிற்பங்கள், அழகான நந்திகள், நேர்த்தியான கருவறைகள், அழகான மண்டபங்கள், சிம்மத்தூண்கள், விமானங்கள் என்ற நிலையில் ஒவ்வொன்றும் தனித்த கூறுகளைக் கொண்டு அமைந்துள்ளது.


தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை தகவல் பலகையில்


மன்னு பெரும் பழுவூர்


இவ்வூர் பழுவேட்டரையர் என்ற வேளிர்களின் தலைநகராயிருந்தது. கி.பி.10-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆதித்த சோழரின் காலத்தில் இக்கோயில் பழுவேட்டரையரால் கட்டப்பெற்றது.


.இக்கோயில் முழுவதற்கும் அவனி கந்தர்வ ஈஸ்வர கிருஹம் என்று பெயர்.

இதனுள் இரண்டு கற்கோயில்கள் உள்ளன. தென்புறம் உள்ளதின் பெயர் தென்வாயில் ஸ்ரீ கோயில்" வடபுறம் உள்ளதின் பெயர் வடவாயில் ஸ்ரீ கோயில்" மன்னுபெரும் பழுவூர் என்றும் அவனி சுந்தர்வபுரம் என்றும் குறிக்கப்படுகிறது.