tamilnadu epaper

பாகிஸ்தானுடன் மோதல் முடிந்தாலும்.. தொடர்ந்து உஷார்நிலையில் டெல்லி

பாகிஸ்தானுடன் மோதல் முடிந்தாலும்.. தொடர்ந்து உஷார்நிலையில் டெல்லி

புதுடெல்லி,


பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதல் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது.


இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இந்த தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்தது.



இதன்படி பாகிஸ்தான் ராணுவத்துடன் இந்திய ராணுவம் நடத்திய மோதல் 4 நாட்கள் நீடித்தது. 7-ந்தேதி தொடங்கிய மோதல் 11-ந்தேதி நிறைவு பெற்றது. மோதலின்போது எல்லைப்பகுதிகள் மட்டும் இன்றி, தலைநகர் டெல்லியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. நாடாளுமன்றம் மற்றும் இந்தியா கேட், செங்கோட்டை, குதுப்மினார் போன்ற சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.


இந்நிலையில் இந்த பாதுகாப்பு, தற்போது வரை விலக்கப்படவில்லை. அப்படியே தொடர்கிறது. மேலும் முன்பைவிட சற்று கூடுதலாகவே உள்ளது. சாலைகளில் தடுப்பு வேலிகள் முன்பு இருந்ததை விட நேற்று அதிகமாக்கப்பட்டுள்ளது. உள்துறை மந்திரி அமித்ஷா வீடு நோக்கி செல்லும் சுநேரி பாக் ரோடு, நேற்று இரவு போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு இருந்தது. இரவு ரோந்து தீவிரமாக்கப்பட்டது. வாகன தணிக்கையும் தீவிரம் ஆக்கப்பட்டிருந்தது.


மேலும், அரசு நிறுவனங்கள் மற்றும் துறைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்க ஏர் சைரன்கள் நிறுவுவது தொடரும் என்றும், முக்கிய அரசுத் துறைகளில் அதிகாரிகளின் விடுமுறைகளை ரத்து செய்யும் உத்தரவுகள் இன்னும் அமலில் இருப்பதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.