டாக்கா:
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களை வங்கதேசம் ஆக்கிரமிக்க வேண்டும் என வங்கதேசத்தின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸின் உதவியாளரான ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் ஃபஸ்லுர் ரஹ்மான் கூறியுள்ளார்.
இதை பேஸ்புக் பக்கத்தில் வங்காள மொழியில் அவர் பதிவிட்டுள்ளார். “பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் மேற்கொண்டால் வட கிழக்கு இந்தியாவில் உள்ள 7 மாநிலங்களை வங்கதேசம் ஆக்கிரமிக்க வேண்டும். இது குறித்து சீனா உடன் கூட்டு ராணுவ நடவடிக்கை சார்ந்த பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என நான் நினைக்கிறேன்” என அதில் ஃபஸ்லுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஃபஸ்லுர் ரஹ்மானின் கருத்தை எந்த வகையிலும் வங்கதேச இடைக்கால அரசு ஆதரிக்கவில்லை என வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. “அவரது கருத்துக்கள் வங்கதேச அரசாங்கத்தின் நிலைப்பாட்டையோ அல்லது கொள்கைகளையோ பிரதிபலிக்கவில்லை. எனவே, அரசாங்கம் அதை எந்த வடிவத்திலும் ஆதரிக்கவில்லை” என தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT
HinduTamil2ndMayHinduTamil2ndMay
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் சீனா சென்ற வங்கதேச தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ், அந்நாட்டின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியாவின் வட கிழக்கில் உள்ள 7 மாநிலங்கள் நிலத்தால் கட்டுண்டு கிடப்பதாகவும், அந்த மாநிலங்களுக்கு கடல் மார்க்க பாதுகாப்புக்கு ஆதாரம் வங்கதேசம்தான் என்றும் கூறி இருந்தார்.
மேலும், வங்கதேசத்துக்கு இருக்கும் இந்த புவியியல் நிலையைப் பயன்படுத்தி வங்கதேசத்தில் சீனா பொருளாதார ரீதியாக காலூன்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். முகம்மது யூனுஸின் இந்த பேச்சுக்கு இந்திய தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எழுந்திருக்கிறது.