புதுடெல்லி, மார்ச் 22–
கிராமப்பகுதிகளில் அனைவருக்கும் வீடு என்ற இலக்கை அடையும் வகையில், ஊரக மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2016 ஏப்ரல் 1 முதல் தகுதி வாய்ந்த குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய 2.95 கோடி வீடுகள் கட்டுவதற்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
2024– -25 முதல் 2028-–29 வரையிலான நிதியாண்டில் கூடுதலாக 2 கோடி கிராமப்புற வீடுகளை இத்திட்டத்தின் கீழ் கட்டுவதற்கான முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 17-ம் தேதி நிலவரப்படி, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 3.79 கோடி வீடுகள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 3.56 கோடி வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 2.72 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் படி, தமிழ்நாட்டில் 9,57,825 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 6,35,748 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. வீடுகள் கட்ட அனுமதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை, மின்னணு முறையில் நேரடியாக அவர்களின் வங்கி அல்லது தபால் அலுவலக கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. இதன் மூலம் இந்த திட்டத்தின் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது என்று மாநிலங்களவையில் ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் சந்திரசேகர் பெம்மசானி நேற்று தெரிவித்தார்.