வாஷிங்டன், மார்ச் 20
விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்களுக்கு மேலாக இருந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உள்ளிட்ட 4 பேர் இந்திய நேரப்படி நேற்று அதிகாலையில் பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.
அவர்களை சுமந்து வந்த டிராகன் விண்கலம் புளோரிடா அருகே கடலில் பாராசூட்கள் உதவியுடன் பாதுகாப்பாக தரையிறங்கியது. மீட்புப்படையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர். அவர்கள் வெற்றிக்கரமாக பூமிக்கு திரும்பியுள்ளதை உலகமே மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
286 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரரான வில்மோர் ஆகியோரை பூமிக்கு திரும்ப அழைத்து வர அனுப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம், விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தை சமீபத்தில் சென்றடைந்தது.
கடலில் டால்பின்கள்
துள்ளி குதித்தன
இதையடுத்து சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் மற்றும் கடந்த சில மாதங்களாக அங்கு பணியாற்றிய அமெரிக்க வீரர் நிக் ஹேக், ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் இந்திய நேரப்படி நேற்று (மார்ச் 18) காலை 10.30 மணியளவில் டிராகன் விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டனர்.
சுமார் 17 மணி நேர பயணத்துக்குப்பின் அமெரிக்காவின் புளோரிடா அருகே கடல் பகுதியில் பாராசூட்கள் உதவியுடன் இன்று (இந்திய நேரப்படி) அதிகாலை 3.30 மணியளவில் டிராகன் விண்கலம் பாதுகாப்பாக தரையிறங்கியது. அதனைத் தொடர்ந்து மீட்புப் பணிக்காக தயார் நிலையில் இருந்த கப்பல், கடலில் பாதுகாப்பாக இறங்கியுள்ள டிராகன் விண்கலத்தை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கியது. அப்போது சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேரை பூமிக்கு வரவேற்கும் விதமாக கடலில் டால்பின்கள் துள்ளி குதித்து வரவேற்றன.
கையசைத்தபடி மகிழ்ச்சி
டிராகன் விண்கலத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ், வில்மோர், நிக் ஹேக், அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகிய 4 வீரர்களையும் ஒவ்வொருவராக கப்பலில் சென்ற மீட்பு குழுவினர் மீட்டனர். பூமிக்கு திரும்பிய உற்சாகத்தில் கையசைத்தபடி வீரர்கள் வெளியே வந்தனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பான உடைகளை அணிந்திருந்தனர். விஞ்ஞானிகள் பத்திரமாக கப்பலுக்குள் அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள், வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
4 விண்வெளி வீரர்களும் வெளியே வந்த தருணத்தில் அவர்களின் கையசைவுகளும், புன்னகைகளும் உலகளவில் மகிழ்ச்சியும், நிம்மதியும் கொடுத்தது.
மருத்துவமனையில் 45 நாட்கள்
தொடர்ச்சியாக பல மாதங்கள் விண்வெளியில் இருந்துவிட்டதால் கை, கால் செயல்பாடுகளில் சிரமம், தலை சுற்றல், தசை சிதைவு உள்ளிட்டவற்றால் விண்வெளி வீரர்கள் பாதிக்கப்படக்கூடும் என்பதால் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேரும் ஹூஸ்டனில் உள்ள நாசா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் குடும்பத்தினரை சந்திக்க அவர்கள் அனுமதிக்கப்படுவர். அதன் பின்னர் 45 நாட்கள் வரை அந்த மருத்துவமனையிலேயே தங்கி மறுவாழ்வு சிகிச்சைகளைப் பெறுவர்.
குஜராத்தில் சுனிதா வில்லியம்சின் பூர்வீக கிராமமான ஜுலாசனில் பட்டாசுகள், இனிப்பு, ஆட்டம் பாட்டம் என களைகட்டிய கொண்டாட்டம் அரங்கேறியது. டி.வி.யில் அவரது படத்துக்கு ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக கொண்டாடினர்.
இதுவரை விண்வெளி வீரர், வீராங்கனைகள் அதிகபட்சமாக 2 வெவ்வேறு விண்கலங்களில் மட்டுமே பயணம் செய்துள்ளனர். ஆனால் சுனிதா வில்லியம்ஸ் ஸ்பேஸ் ஷட்டில், சோயூஸ், போயிங் ஸ்டார்லைனர், ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் ஆகிய நான்கு வெவ்வேறு விண்கலங்களில் பயணம் செய்த அனுபவத்தைப் பெற்றிருக்கிறார். இதனாலேயே அவர் ‘ஸ்டார் ஆஸ்ட்ரோனட்’ அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.
இந்த 286 நாட்களில் சுனிதாவும், வில்மோரும் விண்வெளியில் 121 மில்லியன் ஸ்டாட்யூட் மைல் பயணித்துள்ளனர். ஒரு ஸ்டாட்யூட் மைல் என்பது கிட்டத்தட்ட 5280 அடி எனக் கொள்ளலாம்.
வெள்ளை மாளிகை
வரவேற்பு
ஸ்பேஸ் எக்ஸ், நாசா இணைந்து விண்வெளி வீரர்களை பத்திரமாக பூமிக்கு அழைத்து வந்த நிலையில் வெள்ளை மாளிகை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், “வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றினார். 9 மாதங்களாக விண்வெளியில் சிக்கிக் கொண்ட வீரர்களை ட்ரம்ப் பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்துள்ளார். நாசா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களுக்கும் எலான் மஸ்குக்கும் நன்றி.” என்று குறிப்பிட்டுள்ளது.
விண்வெளி வீரர்களை பத்திரமாக அழைத்து வந்த நாசா குழுவுக்கும், திட்டத்துக்கு முன்னுரிமை அளித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கும் நன்றி என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.
உறவினர்கள் உற்சாகம்
சுனிதா பூமிக்குத் திரும்பிய தருணம் குறித்து அவரது உறவினர் தினேஷ் ராவல் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், “நேற்று வரை எனக்குப் பதற்றமாகவே இருந்தது. சுனிதாவை பூமியில் பார்த்ததும் நாங்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தோம். இறைவன் எங்கள் பிரார்த்தனைகளைக் கேட்டு சுனிதாவை பத்திரமாக அழைத்துவரச் செய்துள்ளார்” என்றார்.கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார்லைனர் என்ற புதிய விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் ஐஎஸ்எஸ் எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றனர். அவர்களின் திட்டம் 8 நாட்கள் அங்கு இருந்து ஆய்வுகளை மேற்கொள்வது. ஆனால் ஸ்டார்லைனரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படவே சுனிதா, வில்மோர் அங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டது. 8 நாட்கள் பயணம் 9 மாதங்களானது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரோ வாழ்த்து
இஸ்ரோ சார்பில், அதன் தலைவர் நாராயணன் வரவேற்பும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். அவர் சமூக வலைதளத்தில், வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: welcome back சுனிதா வில்லியம்ஸ். விண்வெளி மையத்தில் இருந்து நீண்ட பயணத்திற்குப் பிறகு நீங்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை. நாசா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுக்கான அர்ப்பணிப்புக்கு ஒரு சான்று. உங்கள் அர்ப்பணிப்பு உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆர்வலர்களை தொடர்ந்து ஊக்குவிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.