பள்ளிக்குச் சென்ற அசலா
இன்னும் திரும்பவில்லை. இங்கே அங்கே என்று எங்கும் தேடியாயிற்று. ஏழு வயது குழந்தை மலர்ந்து சிரிக்கையில் மனது நிறைந்துவிடும். மலை விட்டு இறங்கி பள்ளியில் படிப்பது வாழ்க்கையில் முன்னேற உதவி செய்யும் என்றே குழந்தையை பள்ளிக்கு அனுப்பினாள்; பைதேகி.கணவர் இந்திய ராணுவத்தில் சேர்ந்து வீர மரணம் அடைந்ததிற்குப் பிறகு, தன் மகள் ஒருத்தியையே வாழ்வின் கலங்கரை விளக்கமாகவும் ஆதாரமாகவும் வாழ்ந்து கொண்டிருந்த அவள் இன்று பரிதவித்து நிற்கிறாள்."என் கண்ணே! என் செல்லமே!
எங்கே நீ இருக்கே;" என்று கதறுவது எவர் மனத்தையும் உருக்குவதாக இருந்தது. வழி தப்பி மலைக் காட்டுப் பக்கம் போய்விட்டாளா? மலைசாதியினரிடமிருந்து,தப்பிக்க வழி தெரியாமல் தவிக்கிறாளா? வேறு பாவிகளின் கையில் அகப்பட்டு கொண்டாளா? காவல் நிலையத்தில் புகாரை எடுக்கவே யோசிக்கிறார்களே; என்ன செய்வது? அந்த சிற்றூரில் இருக்கும் பெண்கள் அனைவரும் திரண்டு காவல் நிலையம் நோக்கி ஊர்வலமாக செல்ல; முன்னே இருந்த பாருணி," அதோ எவரோ ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு மலையிலிருந்து இறங்குகிறான்; பிடியுங்கள்; பிடியுங்கள்; என்று அலறி, எல்லோரும் அந்த திசை நோக்கி ஓடத் துவங்கினார்கள். வந்தது ஒரு நடுத்தர வயதுப் பெண்.முக்காட்டை நன்றாக இழுத்து விட்டிருந்தாள். "நானும் ஒரு அன்பு மிகு தாய்தான்" என்று போஜ்புரி மொழியில் சொல்லிய வண்ணம் காட்டில் ஓடி மறைய முற்பட; எங்கிருந்தோ வந்த துப்பாக்கி குண்டு அவள் நெஞ்சில் பாய்ந்து அவளைக் கீழே சரித்தது. " யா! அல்லா! என்று உரத்து குரலிட்டு அவள் விழுந்ததைப் பார்த்த குழந்தை அசலா அவள் பின்னே" அம்மா! அம்மா! என்று அழுது கொண்டே ஓடியது கண்டு அனைவரும் திகைத்து நின்று விட்டனர்; கண்ணில் தளும்பும் நீருடன்.
சசிகலா விஸ்வநாதன்