tamilnadu epaper

மனஉறுதி, தைரியம், விடாமுயற்சி, முன்மாதிரிப் பெண்மணி சுனிதா வில்லியம்சுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி பாராட்டு

மனஉறுதி, தைரியம், விடாமுயற்சி, முன்மாதிரிப் பெண்மணி சுனிதா வில்லியம்சுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி, மார்ச் 19

9 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்சுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமி திரும்பினார்.


இந்த நிலையில் பூமிக்கு திரும்பியவர்களுக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து வருகிறார்கள்.


ஜனாதிபதி


ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:


நாசாவின் க்ரூ 9 விண்வெளிப் பயணம் பூமிக்கு பாதுகாப்பாக திரும்பியதற்குப் பின்னால் இருந்த முழு குழுவினருக்கும் வாழ்த்துக்கள். இந்தியாவின் மகள் சுனிதா வில்லியம்சும் அவரது சக விண்வெளி வீரர்களும் தங்கள் விடாமுயற்சி, அர்ப்பணிப்பால் அனைவரையும் ஊக்கப்படுத்தியுள்ளனர். அவர்களின் வரலாற்றுப் பயணம் உறுதிப்பாடு, குழுப்பணி மற்றும் அசாதாரண தைரியத்தின் கதை. அவர்களின் அசைக்க முடியாத உறுதியை நான் வணங்குகிறேன், அவர்கள் சிறந்த ஆரோக்கியத்தை பெற வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.


பிரதமர் மோடி


அந்த வகையில் பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:


மீண்டும் வருக! பூமி உங்களை மிஸ் செய்தது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் க்ரூ 9 விண்வெளி வீரர்கள் மீண்டும் ஒருமுறை விடாமுயற்சி என்ன என்பதைக் நிரூபித்து காட்டியுள்ளனர்.


தனது வாழ்க்கை முழுவதும் முன்மாதிரி பெண்மணியாக தன்னை வெளிப்படுத்தி உள்ளார் சுனிதா வில்லியம்ஸ். அவரின் மன உறுதி, தைரியம் மற்றும் எல்லையற்ற மனித மனப்பான்மையின் சோதனையாக இருந்தது.


விண்வெளி ஆய்வு என்பதும் மனித ஆற்றலின் வரம்புகளை தாண்டியது ஆகும். பாதுகாப்பாக பூமி திரும்ப அயராது உழைத்த அனைவரையும் நினைத்து பெருமைப்படுகிறேன். அறியப்படாத பரந்த உலகில் அவர்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடு என்றென்றும் லட்சக்கணக்கானவர்களுக்கு ஊக்கமளிக்கும்.


விண்வெளி நிலையத்தில் இருந்து, பாதுகாப்பான வருகையை உறுதிசெய்ய அயராது உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “சுனிதா வில்லியம்சின் வியத்தகு பயணம், அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, மன உறுதி மற்றும் போராட்ட குணம் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கானோருக்கு உத்வேகம் அளிக்கும். அவர் பாதுகாப்பாக திரும்புவது விண்வெளி ஆர்வலர்களுக்கும் முழு உலகுக்கும் ஒரு கொண்டாட்ட தருணம். அவரது துணிச்சலும், சாதனைகளும் நம் அனைவரையும் பெருமைப்படச் செய்கிறது” என்று தெரிவித்துள்ளார்.


எடப்பாடி


அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-


திட்டமிடப்படாத 9 மாதங்கள் விண்வெளியில் இருந்து, நிச்சயமற்ற தன்மை மற்றும் சவால்களை எதிர்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் மற்று புட்ச் வில்மோர் ஆகியோரின் மீள்தன்மைக்கு எனது சல்யூட். குறிப்பாக விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தைரியம் மற்றும் உறுதிப்பாட்டின் உருவகமாக அங்கு வலுவாக நின்றார். அவரது பயணம் விண்வெளி ஆய்வு மட்டுமல்ல, பெண்களின் வலிமை மற்றும் அதிகாரமளித்தல் பற்றியது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரராக, அவரது முன்மாதிரியான பயணம் விடாமுயற்சிக்கு ஒரு சான்றாகும். நான்கு பேர் கொண்ட குழு கிரூவ்9 உங்களை நமது வீட்டிற்கு வரவேற்கிறோம். உங்கள் கதை வருங்கால தலைமுறைகளை தொடர்ந்து ஊக்குவிக்கும்.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே பிரதமர் மோடி, முன்னாள் நாசா விண்வெளி வீரர் மைக் மாசிமினோ மூலம் ஒரு வாழ்த்து கடிதத்தை அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், ‘நீங்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தாலும், எங்கள் இதயங்களுக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள். இந்திய மக்கள் உங்கள் நல்ல ஆரோக்கியத்திற்காகவும், உங்கள் பணியில் வெற்றி பெறவும் பிரார்த்தனை செய்கிறார்கள்.


நீங்கள் திரும்பிய பிறகு, இந்தியாவில் உங்களைப் பார்க்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்தியா தனது மிகவும் புகழ்பெற்ற மகள்களில் ஒருவரை வரவேற்பதில் மகிழ்ச்சி.


எனது ஒவ்வொரு அமெரிக்க பயணத்தின்போதும் உங்களைப்பற்றி விசாரித்து இருக்கிறேன். உங்களது சாதனைகளில் 140 கோடி இந்தியர்களும் பெருமை கொள்கிறார்கள். சமீபத்திய முன்னேற்றங்கள் உங்கள் மன உறுதியையும், விடாமுயற்சியையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளன.


உங்களுக்காக காத்திருக்கும் உங்களின் தாயார் போனி பாண்ட்யாவுடன், உங்கள் தந்தை தீபக் பாயின் ஆசீர்வாதமும் இருக்கும் என்று நம்புகிறேன்.


இவ்வாறு வாழ்த்து கடிதத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.


இதேபோல் சுனிதா வில்லியம்சின் கணவர் மைக்கேல் வில்லியம்சுக்கும் பிரதமர் தனது வாழ்த்துகளை அனுப்பியுள்ளார்.