tamilnadu epaper

மறைமலைநகரில் 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை: 5 பேர் கைது

மறைமலைநகரில் 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை: 5 பேர் கைது

செங்கல்பட்டு,


செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் 1-வது தெருவை சேர்ந்தவர் விமல் (வயது 22), அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் ஜெகன் (21), இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு காந்திநகர் மெயின் ரோடு சாலை ஓரமாக நின்றபடி பேசிக் கொண்டிருந்தனர்.


அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் இருவரையும் சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கீழே சரிந்து விழுந்த விமல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த ஜெகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெகன் பரிதாபமாக உயிரிழந்தார்.



இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக விமல், ஜெகன் ஆகிய இருவரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்களா? அல்லது உறவினர்களிடையே ஏற்பட்ட நிலத்தகராறு காரணமாக கொலை நடந்ததா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்து வந்தனர். மேலும் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கொண்ட கும்பலை தீவிரமாக தேடி வந்தனர்.


இந்த நிலையில், இந்த கொலை வழக்கில் மறைமலைநகர் காந்திநகர் பகுதியை சேர்ந்த விமலின் நெருங்கிய உறவினர் நித்தீஷ் (20), திருநங்கை மணிகண்டன் என்கிற மணிமேகலை (34), கற்பகம் ( 37), ஜார்ஜ் பெர்னாண்டஸ் ( 25), கரும்பூர் பகுதியை சேர்ந்த நேதாஜி (25), ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கழிவுநீர் குழாய் பதிக்கும்போது ஏற்பட்ட நிலத்தகராறு காரணமாக இந்த கொலையை விமலின் உறவினர்களே திட்டமிட்டு செய்ததாக போலீசாரிடம் கைதானவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.