tamilnadu epaper

மாசிவடு சிறப்பு....

மாசிவடு சிறப்பு....


பங்குனி வடாம் அடுத்து...


நாங்கள் குழந்தைகளாக இருக்கும்போதே இந்த வடுமாங்காய்க்கு ஏகப்பட்ட கிராக்கி எங்கள் நண்பர்கள் கூட்டத்தில்


இதில் சிறப்பு என்னான்னா அழுகிய மாவடுவும் ருசியே...


அதன் சாரும் பித்தளை பாத்திரம் தேய்க்க உபயோகப்படுத்திக் கொள்வார்கள்


மாதா ஊட்டாத சாதத்தை வடுமாங்கா ஊட்டி விடும்


இதனை விழாமாதிரியே கொண்டாடுவார்கள் வீட்டில்.,.இரண்டு மூன்று பேர்கள்தான் பச்சை வடுமாங்காய் விற்பனைக்குக் கொண்டுவருவார்கள்


அம்மாவின் விருப்பம் கிளிமூக்கு வடு

அப்பாவிற்கு குண்டா வட்டமாக இருக்கும் மாங்காய்...


தனி தனியாக வாங்கி தனிதனியாகவே‌ போடுவார்கள்

அந்த ரெசிபிக்குள்ள நான் இப்போ போகல...


ஜாடி ஜாடியாக வடுமாங்காயும் வத்தலும் ஒரு வருடத்தைச் சமாளிக்கும் ஸ்நேக்குகள் அந்தக்காலத்தில்...


இப்ப எதுக்கு இத எழுத ஆரம்பித்தேன் என்றால் இவ்வகை வடுமாங்காய் சங்க காலத்தில் இருந்தே இருக்கா 

இதனை உவமைப் படுத்திப் பாடி இருக்கிறார்களா எதற்கு உவமைப் படுத்தி இருக்கிறார்கள் என்ற தேடலில் கிடைத்த சில முத்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்...


முதலில் ஞாபகம் வரும் பாடல் வடுமாங்காய் ஊரட்டடுங்கோ தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ..


இப்பாடலில் சுவை மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது...


மற்றொரு பாடல்..நமது கவிஞரின் சொற்கள் மாவடு கண்ணல்லவோ...முத்தான முத்தல்லவோ...


ஆஹா எப்படி இவர்க்கு இந்த உவமை கிடைத்தது..கண்களை நீண்ட பெரிய கண்கள் தாமரை கண்கள் குவளை மலரை உண்மையாகச் சொல்லுவர் 


ஆனால் கவிஞர் 


கண்களுக்குப் சொல்லி இருக்காரே என மீண்டும் தேடலில் ஒரு அழகான காதல் ஓவியம் கிடைத்தது....



#மாவடு


பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான கைந்நிலை என்னும் நூலில் வரும் பாடல் இது


இதனை இயற்றியவர் புல்லங்காடனார் 60 பாடல்களைக் கொண்டது குறிஞ்சியில் 12-ம் பாலையில் ஏழும் முல்லையில் மூன்றும் மருதத்தில் 11-ம் உள்ளன


பாலையில் வரும் முதல் பாடல் இது


கடிகி யதரலைக்கும் கல்சூழ் பதுக்கை

விடுவி லெயினர்தம் வீளையோர்த்தோடும்

நெடுவிடை அந்தச் செலவுரைப்பக் கேட்டே

வடுவிடை‌மெல்கின கண்


தலைமகன் தலைவியைப் பிரிந்து செல்வதற்கு மனம் இசையாது தலைவி தன்பால் வந்து பிரிவை உணர்த்திய தோழியிடம் சொல்வது போல் உள்ளது இப்பாடல்


தலைவன் தலைவியை விட்டு வாழ்வதற்குப் பொருளீட்டும் நிமித்தமாகப் பயணப்படுகிறான் 


தலைவிக்கு ஒரு இனம் தெரியாத பயமும் கவலையும் வந்துவிடுகிறது பிரிவு அவளை வருத்துகிறது தன்னோடு மட்டுமல்லாமல் தலைவனும் படப்போகும் துன்பங்களை நினைத்து நெகிழ வைக்கிறது 


அவன் போகப்போகும் உலகத்தைப் பற்றிய அது எப்படி இருக்கும் என அறிந்திலள்

ஆனால் கேள்விப்பட்டு வருந்துகிறாள் அவன் போகப்போகும் பாலைநிலம் அவள் கண் முன்னே விரிகிறது 


சுட்டெரிக்கும் மணல்வெளி மருந்துக்குக் கூட ஒரு மரம் கிடையாது பாறைகளையும் அவற்றிற்குப் பின்னர் கள்ளர்களும் கொள்ளையர்களும் பதுங்கி இருக்கலாம் அவர்கள் மிரட்டி பொருள்களை பறித்தும்‌உயிர்களைக் கொல்லவும் செய்வர்.. இரக்கம் இல்லாதவர்களாய் இருப்பார்கள் 


அந்த பாலை நிலத்தின் வழியே நீ செல்ல வேண்டியுள்ளதால் அதை நினைக்கும் போதே என் கண்களில் கண்ணீர் ததும்பி விடுகிறது என்று தோழியிடம் சொல்கிறாள்


விளக்கம்...விரைந்து நீ என்னை விட்டு பிரிந்து கற்கள் சூழ்ந்த பாலை நிலத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் கொள்ளையர்கள் வழியில் வருவோரை வில் அம்புகளால் பொருள்களை வழிப்பறிசெய்து வாழும் எயினர்கள் நிறைந்த பாலை நிலத்தின் வழியாக போகப் போகிறாய் என்பதை கேட்ட உடனே வடுமாங்காய் போன்ற கண்களை உடைய தலைவியின் மென்கண் நீரை வெடித்தன


மாவடு மென்மைத் தன்மை உடையது அல்ல ஆனால் இங்கு கவிஞர் வடுவிடை மெல்கின கண்‌என்கிறார்...


தண்ணீரில் ஊறிய வடு மென்மை ஆகிறது அதுபோல தலைவியின் கண்ணீர் பெருக்கால் மென்கண் ஆகிறதாம்


இதனை கவிஞர் தன் பாடலில் மாவடு கண்ணல்லவோ என்கிறார்


கண் என்பது கண்களைக் குறிக்கும் கண்காட்சி இரு கண்களும் ஒரு காட்சியைத்தான் காண்கிறது இரு கண்களுக்கும் ஒரு மாவடுவை உவமை ஆக்கியுள்ளார்


மாவடுவை இரண்டாகப் பிளந்தால் ஒரு கண்ணின் அமைப்பு வரும் இதுவும் இன்னொரு பாடலில் புலவர்கள் பாடியுள்ளனர் எனவே இரு கண்களுக்கும் பிளவுபட்ட மாவடுவை உவமையாகச் சொல்லி உள்ளார்


-பானுமதி நாச்சியார்