சென்னை, ஏப்.17-
பிரிவினைவாதத்தை தூண்டுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்புவதா? என நயினார் நாகேந்திரனுக்கு தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“மாநிலங்களை பிரிக்க வேண்டும் என பிரிவினைவாதத்தை முதல மைச்சர் தூண்டுகிறார்" என பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார். அண்ணா தி.மு.க.வில் இருந்த அவருக்கு அண்ணாவின் அடிப்படை சித்தாந்தம் கூட தெரியாத ரசிக மனநிலையில் இருந்திருப்பதையே இது காட்டுகிறது.
‘அனைத்து அதிகாரங்களையும் கொண்டவையாக விளங்கினால்தான் மாநிலங்கள் வளர்ச்சி அடையும். இந்தியாவும் வலிமை பெறும்' என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதை கேட்டிருந்தாலே அவரின் நல்ல நோக்கம் புரிந்திருக்கும். டெல்லி எஜமானர்கள் கோபித்துக்கொண்டால் பதவிக்கு ஆபத்து நேருமோ என்ற பதற்றத்தில் அவசரமாக பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துவிட்டு, நயினார் நாகேந்திரன் அவதூறு பரப்பி இருப்பது கண்டிக்கத்தக்கது.
மாநில உரிமைகளை தி.மு.க. கோருவது இந்திய நாட்டை வலிமை யற்றதாக மாற்றிவிடுமா? என்பதற்கு நயினார் நாகேந்திரன் பதில் சொல்ல வேண்டும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையில் ‘ஒற்றுமையை பாதிக்காத வகையில் உரிமையை மீட்டு எடுப்போம்' என்று குறிப்பிட்டதன் அர்த்தம் நயினார் நாகேந்திரனுக்கு தெரியுமா?.
மாநில சுயாட்சிக்கு செயல்வடிவம்
அண்ணா உருவாக்கிய மாநில சுயாட்சி என்ற கருவிற்கு கருணாநிதி உருவம் கொடுத்தார். அந்த உருவத்திற்கு தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்வடிவம் கொடுத்து வருகிறார். இந்த அரசியல் நயினார் நாகேந்திரனுக்கு புரியவில்லை என்றால் அண்ணா தி.மு.க. என்ற திராவிடக் கட்சியில் இருந்தார் என்பதற்கு வெட்கப்பட வேண்டுமா?
நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். கும்பலும், குஜராத்தை சேர்ந்த பா.ஜ.க. தலைமையும் ஏவும் பணியை மாநிலங்களில் உள்ள பா.ஜ.க. தலைமை சிரமேற்று செய்து முடிப்பது போல மாநிலங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரும் இருக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் நினைப்பது அவரின் அரசியல் புரிதல் குறைப்பாட்டை காட்டுகிறது. ‘தி.மு.க. பிரிவினைவாதம் பேசுகிறது' என திராவிட எதிர்ப்பாளர்கள் பேசிய 50 ஆண்டுக் கால பழைய முனை மழுங்கிய வாதத்தை விட்டுவிட்டு, மத்திய அரசின் கட்டளைக்கு அடிபணியும் மாநிலம் தமிழ்நாடு இல்லை. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற பரந்துபட்ட கொள்கை முழக்கம் தி.மு.க. வுடையது மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களின் உணர்விலும் உயிரிலும் கலந்த முழக்கம் என்பதால் தமிழ்நாட்டு உரிமைகளை பறித்தால் முன்பைபோல பா.ஜ.க. 2026 சட்டமன்ற தேர்தலிலும் ‘டெபாசிட்' கூட வாங்காது என எஜமானர்களுக்கு நயினார் சொல்வது நல்லது என்றார்.