சென்னை:
ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் குளிர்சாதன வசதியுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள மெரினா கிளை நூலகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.
சென்னை மாநகர மூலக ஆணைக்குழுவின் கீழ் இயங்கி வரும் மெரினா கிளை நூலகம் ரூ.38 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை ஈர்க்கும் வகையில் அந்நூலகத்தின் சுற்றுச்சுவர் உட்பகுதியில் கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு தொடர்பான வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
நூலகத்தின் முன்புறம் மூங்கில் வளைவுடன் கூடிய பாதை அமைக்கப்பட்டு இருபுறமும் வசதியான இருக்கைகளும், சிறுவர்கள் விளையாட ஊஞ்சலும் அமைக்கப்பட்டுள்ளன.
காமிக்ஸ் கார்னர்: அதோடு, சிறுவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் படவிளக்க கதைப்புத்தகங்கள் அடங்கிய 'காமிக்ஸ் கார்னர்' வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மநகரம் தொடர்பான தகவல்கள் அடங்கிய அரிய நூல்கள் உள்பட 750 நூல்கள் இந்நூலகத்தில் இடம்பெற்றுள்ளன. குளிர்சாதன வசதியுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள மெரினா கிளை நூலகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். நூலகத்தின் வளர்ச்சிக்காக ரூ.1000 நிதி வழங்கி புதிய புரவலர்களாகியுள்ள 9 பேருக்கு அவர் புரவலர் சான்றிதழையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், அத்துறையின் செயலர் பி.சந்திரமோகன், பொது நூலகத்துறை இயக்குநர் பொ.சங்கர், சென்னை மாநகர நூலக ஆணைக்குழு தலைவர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.