tamilnadu epaper

வர்த்தகப் போரின் விளைவு: அமெரிக்காவில் ரூ.32 லட்சம்.. அதுவே சீனாவில் வெறும் ரூ.1 லட்சம் - வைரல் வீடியோ -

வர்த்தகப் போரின் விளைவு: அமெரிக்காவில் ரூ.32 லட்சம்.. அதுவே சீனாவில் வெறும் ரூ.1 லட்சம் - வைரல் வீடியோ -

அமெரிக்கா சீனா மாறி மாறி இறக்குமதிகளுக்கு வரி விதித்து வருகின்றன. இதனால் விலைவாசியில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது. இந்நிலையில் சீன வியாபாரிகள் நேரடியாக அமெரிக்கர்களுக்கு தங்கள் பொருட்களைக் குறைந்த விலையில் விற்க டிக் டாக்கை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.


அமெரிக்காவில் வரியுடன் விற்கப்படும் ஹேண்ட்பேக் போன்ற ஆடம்பர சீன பிராண்டட் பொருட்களை நேரடியாக தாங்களே தருகிறோம் என்றும், இவ்வாறு சீன உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக வாங்குவதன் மூலம் சில்லறை விலைகள் மற்றும் கட்டணங்களைத் தவிர்த்து விலை பன்மடங்கு குறையும் என்றும் சீன வியாபாரிகள் டிக்டாக்கில் களமிறங்கி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.


உதாரணமாக ஒரு வீடியோவில், லுலுலெமன் லெகிங்ஸ், லூயிஸ் உய்ட்டன் கைப்பைகள் மற்றும் பிர்கின் பைகள் போன்ற உயர் ரகப் பொருட்களை அவற்றின் சில்லறை விலையின் ஒரு பகுதிக்கு விற்பனை செய்வதாகக் கூறும் வீடியோக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


வீடியோ ஒன்றில் கையில் பொருளுடன் பேசும் வியாபாரி, தொழிற்சாலை இயந்திரங்களுக்கு முன்னால் நின்று, லுலுலெமன்ஸ் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட யோகா பேன்ட்கள் அமெரிக்காவில் 100 டாலர்களுக்கு விற்கப்படுகின்றன என்றும் அதை வெறும் 5-6 டாலருக்கு வழங்குவதாக கூறுகிறார். இந்த வீடியோ TikTok இல் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.


இதுபோன்ற எண்ணற்ற வீடியோக்கள் TikTok ஐ ஆக்கிரமித்து வருகின்றன. மேலும் பிர்கின் பிராண்டட் ஹேண்ட்பேக் அமெரிக்காவில் 38,000 டாலர்கள்(ரூ.32 லட்சம்) என்றும் அதே பொருளை 1,400 டாலர்களுக்கு (சுமார் ரூ. 1 லட்சத்துக்கு) தருவதாகவும் அவர் விளம்பரப்படுத்துகிறார்.


இருப்பினும் இந்த பொருட்களில் பெரும்பாலானவை ஆடம்பர பிராண்ட்களின் தயாரிப்பை ஒத்த போலியான தயாரிப்புகள் என்ற விமர்சனமும் எழுந்து வருகிறது.