பெயர் : ராகவன் அருணாச்சலம்
இடம் : சென்னை, தமிழ்நாடு
வகித்த பதவி : இந்திய ஆராய்ச்சியாளர்
விருதுகள் : பத்ம பூஷன், பத்ம விபூஷன்
வாழ்க்கை வரலாறு:
ராகவன் அருணாச்சலம், பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய விருதுகளைப் பெற்ற இந்திய அறிவியலாளர் ஆவார். இவர் பாபா அணு ஆராய்ச்சிக் கழகத்திலும், தேசிய வானூர்தி ஆய்வகத்திலும், இராணுவ ஆராய்ச்சி நிறுவனத்திலும் பணிப்புரிந்தார். இந்திய அரசின் இராணுவ ஆராய்ச்சித் துறையில் ஆலோசகராகப் பணியாற்றியவர்.
பெயர் : ஏ. பி. ஜே. அப்துல் கலாம்
பிறப்பு : 15-10-1931
இறப்பு : 27-07-2015
பெற்றோர் : ஜெனுலாப்தீன், ஆஷியம்மா
இடம் : இராமேஸ்வரம், தமிழ்நாடு, இந்தியா
புத்தகங்கள் : இந்தியா 2020, எழுச்சி தீபங்கள், அக்னி சிறகுகள், அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை
வகித்த பதவி : விஞ்ஞானி, முன்னாள் குடியரசு தலைவர், ஆசிரியர், தொழில்நுட்ப வல்லுநர்
விருதுகள் : ராமானுஜன் விருது, பத்ம பூஷன், பத்ம விபூஷன், பாரத ரத்னா, வீர் சவர்கார் விருது
வாழ்க்கை வரலாறு
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கத்தக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படுபவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள்.
பிறப்பு:
1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜெனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரு இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.
இளமைப் பருவம்:
அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.
கல்லூரி வாழ்க்கை:
தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள ‘செயின்ட் ஜோசப் கல்லூரியில்’ இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய ‘விண்வெளி பொறியியல் படிப்பை’ சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:
1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்துக் கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான ‘பத்ம பூஷண்’ விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு ‘பொக்ரான் அணு ஆயுத சோதனையில்’ முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே. அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிப்புரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.
குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:
2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11-வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002-ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான ‘பாரத ரத்னா விருது’ மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், ‘பாரத ரத்னா’ விருது பெற்ற மூன்றாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் ‘மக்களின் ஜனாதிபதி’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.
மரணம்:
அப்துல் கலாம் அவர்கள் ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து மறித்தார்.
பெயர் : சி.வி. ராமன்
இயற்பெயர் : சந்திரசேகர வேங்கட ராமன்
பிறப்பு : 07-11-1888
இறப்பு : 21-11-1970
பெற்றோர் : சந்திரசேகர் ஐயர், பார்வதி அம்மாள்
இடம் : திருச்சி, தமிழ்நாடு, இந்தியா
வகித்த பதவி : விஞ்ஞானி, பேராசிரியர்
விருதுகள் : நோபல் பரிசு, நைட் ஹீட், சர், லெனின் அமைதிப் பரிசு
வாழ்க்கை வரலாறு
இந்தியா உருவாக்கிய மிகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளுள் ஒருவர், சி.வி. ராமன் ஆவார். அவரது முழு பெயர் சந்திரசேகர வேங்கட ராமன். அவரது படைப்புகளில் முன்னோடியான ஒளிச்சிதறலுக்கு, சி.வி. ராமன் அவர்கள் 1930 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். முழுமையாக இந்தியாவிலேயே படித்து நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய அறிஞர் என்ற பெருமையைப் பெற்றவர் சர். சி. வி. ராமன் அவர்கள்.
பிறப்பு:
சந்திரசேகர வேங்கட ராமன், தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் நவம்பர் 7, 1888 ஆம் ஆண்டு பிறந்தார். சந்திரசேகர் ஐயர் மற்றும் பார்வதி அம்மா அவர்களுக்கு இரண்டாவது குழந்தையாக பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்:
சந்திரசேகர வேங்கட ராமன் அவர்களின் தந்தை கணிதம் மற்றும் இயற்பியலில் ஒரு பேராசிரியராக இருந்ததால் அவர் வீட்டில் ஒரு கல்வி சூழலைக் கொண்டிருந்தார். அவர் 1902 ஆம் ஆண்டு, சென்னையிலுள்ள பிரெசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். 1904ஆம் ஆண்டு, பி.ஏ பட்டப்படிப்பில் தேர்ச்சிப் பெற்று முதல் மாணவனாக திகழ்ந்த இவர், இயற்பியலுக்கான தங்கப்பதக்கத்தையும் பெற்றார். நிறைய மதிப்பெண்கள் வித்தியாசத்தில் 1907 ஆம் ஆண்டு எம்.ஏ பட்டம் பெற்றார்.
சி.வி. ராமனின் ஆராய்ச்சிகள்:
இந்தியாவில் அந்த காலக்கட்டத்தில் விஞ்ஞானிகளுக்கு வாய்ப்புகள் குறைவாகவே இருந்தது. அதனால், 1907 ஆம் ஆண்டு, ராமன் அவர்கள் இந்திய நிதித் துறையில் சேர்ந்தார். அவரது அலுவலக நேரம் முடிந்த பிறகு, அவர் கல்கத்தாவில் அறிவியல் அபிவிருத்திக்கான இந்திய சங்கத்தின் ஆய்வகத்தில் அவரது பரிசோதனை ஆய்வை மேற்கொண்டார். அதே ஆய்வகத்தில் அவர் ஒலியியல் மற்றும் ஒளியியல் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார்.
விருதுகளும், அங்கீகாரங்களும்:
1917-ல், கல்கத்தா பல்கலைக்கழகம் சி.வி.ராமன் அவர்களுக்கு இயற்பியலில் ‘சர் தரக்நாத் பாலித் பேராசிரியர்’ என்ற பதவியை வழங்கியது. அடுத்த பதினைந்து ஆண்டுகளாக அங்கு தங்கியிருந்தார். அங்கு அவர் இருந்த காலத்தில், அவரது ஒளியியல் மற்றும் ஒளி சிதறலுக்கான ஆராய்ச்சிப் பணி உலக அளவிலான அங்கீகாரத்தை பெற்றது. லண்டன் ராயல் சொசைட்டியால் அவர் 1924ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1929 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் பேரரசால் இவருக்கு ‘நைட் ஹீட்’ என்ற பட்டமும், இங்கிலாந்து அரசியாரால் ‘சர்’ பட்டமும் அளிக்கப்பட்டது. 1930ல், தனது இயற்பியலுக்கான ஒளிச்சிதறல் ஆராய்ச்சிக்காக சர் சி.வி. ராமன் அவர்களுக்கு ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. பின்னர் இந்த கண்டுபிடிப்புக்கு ‘ராமன் விளைவு’ என்று பெயரிடப்பட்டது.
பிறப் பணிகள்:
1930ல் பெங்களூரில் புதிதாக நிறுவப்பட்ட இந்திய அறிவியல் கழகத்தில், சி.வி. ராமன் அவர்கள் இயக்குனராக சேர்ந்தார். பின்னர், இயற்பியல் பேராசிரியராக அங்கு இரண்டு வருடங்கள் பணியில் தொடர்ந்தார்.
சர் சி.வி.ராமன் நடத்திய சில ஆராய்ச்சிகள்:
சோதனை மற்றும் கோட்பாட்டு ஆய்வுகளான 1947 ஆம் ஆண்டில், அவர் சுதந்திர இந்தியாவின் புதிய அரசாங்கத்தில் முதல் தேசிய பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1948 ஆம் ஆண்டு, இந்தியன் இன்ஸ்டிடியூட்டில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர், ஒரு வருடம் கழித்து, பெங்களூரில் ‘ராமன் ஆராய்ச்சி நிலையம்’ நிறுவி, அங்கு அவர் தனது மரணம் வரை பணிபுரிந்தார்.
இறப்பு:
சர் சி.வி. ராமன் அவர்கள், நவம்பர் 21, 1970 அன்று இறந்தார் .
பெயர் : சீனிவாச இராமானுஜன்
பிறப்பு : 22-12-1887
இறப்பு : 06-04-1920
பெற்றோர் : ஶ்ரீனிவாசன்,கோமளம்
இடம் : ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா
புத்தகங்கள் : முடிவிலியின் வகைமுறை
வகித்த பதவி : கணித மேதை, பேராசிரியர்
வாழ்க்கை வரலாறு
சீனிவாச இராமானுஜன் அவர்களுக்கு கணிதத்தில் மிகுதியான ஆர்வமும், தனிச்சிறப்பு தன்மையும் இருந்தது. அவர் 20 ஆம் நூற்றாண்டின் உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதையாக திகழ்ந்தார். இராமானுஜன் அவர்களின் குறிப்பிடத்தக்க கணிதத் தேற்றங்களில் சில - ‘எண்களின் பகுப்பாய்வு கோட்பாடு’, ‘நீள்வளையச்சார்புகள்’, ‘தொடரும் பின்னங்கள்’, மற்றும் ‘முடிவிலா தொடர்’.
பிறப்பு:
சீனிவாச இராமானுஜன் அவர்கள் தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டத்தில் டிசம்பர் 22ஆம் தேதி, 1887ல் பிறந்தார். அவரது தந்தை கும்பகோணத்திலுள்ள ஒரு துணி வியாபாரியின் கடையில் குமாஸ்தாவாக பணியாற்றினார்.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்:
ராமானுஜன் அவர்கள் தனது ஐந்தாம் வயதில், கும்பகோணத்திலுள்ள ஆரம்ப பள்ளிக்குச் சென்றார். 1898ல், தனது 10 ஆம் வயதில், அவர் கும்பகோணத்திலுள்ள டவுன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். தனது பதினொரு வயதில், அவர் தன் வீட்டில் குடியிருந்த இரண்டு கல்லூரி மாணவர்களிடமிருந்து எஸ்.எல்.லோனி அவர்கள் எழுதிய மேம்பட்ட கோணவியல் புத்தகத்தை வாங்கிப் படித்தார். அப்புத்தகத்தை, அவர் தன் பதிமூன்று வயதிலேயே முற்றும் கற்றுத் தேர்ச்சியடைந்தார். ராமானுஜன் அவர்கள், உயர்நிலை பள்ளியில் சிறந்த மாணவனாக விளங்கி பல பரிசுகள் வென்றார்.
கணிதத்தின் மீது ராமானுஜருக்கு ஏற்பட்ட பற்று:
தனது பதினாறு வயதில் அவர் பெற்ற ‘எ சினாப்சிஸ் ஆஃப் எலமெண்டரி ரிசல்ட்ஸ் இன் ப்யூர் அண்ட் அப்லைட் மாதேமேட்டிக்ஸ்’ என்ற புத்தகமே அவருடைய வாழ்வில் ஒரு திருப்புமுனையாக இருந்தது. அப்புத்தகம் எளிதான ஆயிரக்கணக்கான கணித முடிவுகளின் ஒரு தொகுப்பாகும். இந்த புத்தகமே கணிதத்தின் மீது ராமானுஜன் அவர்கள் வைத்திருந்த ஆர்வத்தை இன்னும் மேம்படுத்தியது. அவர், அப்புத்தகத்தில் பல கணித முடிவுகளை ஆய்வு செய்து அப்பாற்பட்ட விளைவுகளை வெளிக்கொண்டு வந்தார். 1904ல், ராமானுஜன் அவர்கள் கணிதத்தில் ஆழ்ந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார். அவர், தொடர் (1/n)ஐ ஆய்வு செய்து, 15 தசம இடங்களுக்கு ஆய்லரின் மாறிலியைக் கணக்கிட்டார். பெர்னோலியின் எண்கள் அவரது சொந்த கண்டுபிடிப்பாக இருந்தாலும், அதை அவர் தொடர்ந்து படிக்கத் தொடங்கினார். கும்பகோணம் அரசு கல்லூரி, அவருக்கு 1904 ஆம் ஆண்டில் உதவித்தொகை வழங்கியது. ஆனால், அவர் கணிதத்தின் மீது வைத்திருந்த பற்றால், மற்ற பாடங்களில் தேர்ச்சிப் பெறாமல் கல்லூரி தேர்வில் தோல்வியுற்றார். இதன் காரணமாக அவர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார்.
நண்பர்களின் உதவியாலும், கணித கண்டுபிடிப்புகளை பூர்த்தி செய்தும், தனது கண்டுபிடிப்பகளுக்கு ஆதரவு கோரியும் அவர் தன் வாழ்கையை நடத்தினார். 1906ல், ராமானுஜன் அவர்கள் சென்னையிலுள்ள பச்சையப்பா கல்லூரியில் சேர்ந்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் சேர வேண்டுமென்ற ஆர்வம் அவருக்கு இருந்ததால், முதல் கலைத்தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டுமென்ற நோக்கம் கொண்டிருந்தார். தனது கணித வேலையின் தொடர்ச்சியாக ராமானுஜன் அவர்கள் 1908ல் தொடரும் பின்னங்கள் மற்றும் மாறுபட்ட தொடரைப் படித்தார். இச்சூழ்நிலையில் அவரது உடல்நிலை குன்றி தீவிரமாக பாதிக்கப்பட்டதால், 1909ல் அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதிலிருந்து மீண்டுவர அவருக்கு குறுகிய காலம் தேவைப்பட்டது.
இல்லற வாழ்க்கை:
பத்து வயது பெண்ணான எஸ்.ஜானகி அம்மாள் அவர்களை, ஜூலை மாதம் 14 ஆம் தேதி, 1909ல் ராமானுஜன் அவர்கள் திருமணம் செய்தார். இந்த காலத்தில் தனது முதல் படைப்பான ‘பதினேழு பக்க பெர்னோலியின் எண்களை’ வெளியிட்டார். இது 1911ல், ‘இந்திய கணித சங்கம்’ என்ற இதழில் வெளியானது.
ராமானுஜர் மேற்கொண்ட பணிகள்:
1911ல் ராமானுஜன் அவர்கள், இந்திய கணித கழகத்தின் நிறுவனரை தனது வேலை ஆலோசனைக்காக அணுகினார். இந்திய கணித மேதை ராமச்சந்திர ராவ் உதவியதால், அவருக்கு சென்னை துறைமுகத்தில் குமாஸ்தா வேலை கிடைத்தது. சென்னை பொறியியல் கல்லூரியில் கட்டடப் பொறியியல் பேராசிரியராக இருந்த சி.எல்.டி. கிரிப்பித் என்பவர் ராமானுஜன் அவர்களின் திறமைகளில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். அவர் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் கல்வி கற்றதால், அங்குள்ள கணித பேராசிரியர், எம்.ஜே.எம். ஹில் என்பவரை அவருக்குத் தெரியும். அதனால், அவர் 1911ல் வெளியான ராமானுஜன் அவர்களின் பெர்னோலியின் எண்களின் சில நகலை நவம்பர் 12ஆம் தேதி, 1912 ஆம் ஆண்டு ஹில்லுக்கு அனுப்பி வைத்தார். ஹில் அவர்கள், அதை ஊக்குவிக்கும் வகையில், ராமானுஜத்தின் ‘வேறுபட்ட தொடர் முடிவுகள் (Results On Divergent Series) புரிந்து கொள்ளும் அளவிற்கு இல்லை’ என்று பதிலளித்தார். 1910ல் வெளியான ராமானுஜன் அவர்களின் ‘முடிவிலியின் வகைமுறை’ (Orders Of Infinity) புத்தகத்தின் நகலை, ஜி.ஹெச். ஹார்டி என்பவருக்கு ராமானுஜர் அனுப்பி வைத்தார். ராமானுஜன் அவர்கள் கடிதத்துடன் இணைத்த மெய்ப்பிக்கப்படாத தேற்றங்களின் நீண்ட பட்டியலை, ஹார்டி, லிட்டில்வுட் என்பவருடன் இணைந்துப் படித்தார். ராமானுஜன் அவர்களின் தேற்றங்கள் தெளிவாக புரிந்தால், ஹார்டி அவருடன் சேர்ந்து பணிபுரிய விரும்புவதாக பதில் கடிதம் எழுதினார்.
கணிதத்தில் ராமனுஜரின் சாதனைகள்:
மே மாதம் 1913ல், சென்னை பல்கலைக்கழகம் ராமானுஜன் அவர்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கான உதவித்தொகை வழங்கியது. 1914ல், ராமானுஜத்தின் அசாதாரண ஒத்துழைப்பை இணைந்து தொடங்குவதற்காக கேம்ப்ரிட்ஜிலுள்ள ட்ரினிட்டி கல்லூரிக்கு அவரை வரவழைத்தார். ஹார்டி மற்றும் ராமானுஜன் அவர்களின் கூட்டணி பல முக்கியமான ஆய்வுகளுக்கு வழிவகுத்தது. ஹார்டி அவர்களுடனான கூட்டு அறிக்கையில், ராமானுஜன் அவர்கள் ‘p(n) என்ற அணுகுமுறையின் சூத்திரத்தைக்’ (Asymptotic Formula for p(n)) கொடுத்தார். இந்த p(n) சரியான மதிப்பைக் கொடுக்கும் தன்மையைக் கொண்டது. பின்னர், ரேட்மேக்கர் என்பவர் இதனை நிரூபித்தார்.
லண்டனில் குடியேற ராமானுஜன் அவர்களுக்கு பல பிரச்சினைகள் இருந்தது. அவர் ஒரு ஆச்சாரமான பிராமண குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், ஆரம்பத்திலிருந்து அவருக்கு உணவு பிரச்சினைகளும் இருந்தது. ராமானுஜன் அவர்களுக்கு நீண்ட காலமாகவே உடல்நல பிரச்சினைகள் இருந்ததால், முதல் உலக போர் வெடித்தபோது உணவுப் பொருட்கள் கிடைக்க மிகவும் அவதிப்பட்டார்.
மார்ச் 16, 1916 ஆம் ஆண்டு ராமானுஜன் அவர்கள் அறிவியலில் ஆராய்ச்சிக்கான இளங்கலை பட்டத்தைக் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் மூலமாக பெற்றார். அவருக்கு சரியான தகுதிகள் இல்லாத போதிலும் 1914 ஜூனில் நடந்த சேர்ப்பில் அனுமதிக்கப்பட்டார். ராமானுஜத்தின் ஏழு ஆவணங்களைக் கொண்ட உயர் கலப்பு எண்களின் (Highly Composite Numbers) விளக்கவுரை இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது.
இறப்பு:
1917ல், ராமானுஜன் அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டார், ஆகவே, அவரது மருத்துவர்கள் அவர் இறந்துவிட கூடும் என்று அஞ்சினர். செப்டம்பரில் அவருடைய உடல்நிலை சிறிதளவு மேம்பட்டாலும், அவர் தனது பெரும்பாலான நேரத்தைப் பல்வேறு மருத்துவமனைகளிலேயே செலவிட்டார். பிப்ரவரி 18, 1918ல், கேம்பிரிட்ஜ் ஃபிலோசஃபிக்கல் சொசைட்டியின் ஒரு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், லண்டன் ராயல் சொசைட்டியும் அவரைத் தேர்ந்தெடுத்தது.
1918ஆம் ஆண்டு, நவம்பர் இறுதியில் ராமானுஜன் அவர்களின் உடல்நிலை பெரிதும் மேம்பட்டது. பின்னர், அவர் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி 1919ஆம் ஆண்டு கடல்வழியாக இந்தியா புறப்பட்டு மார்ச் 13 ம் தேதி வந்து சேர்ந்தார்.
பெயர் : மயில்சாமி அண்ணாதுரை
பிறப்பு : 02-07-1958
பெற்றோர் : மயில்சாமி, பாலசரசுவதி அம்மையார்
இடம் : பொள்ளாச்சி, கோவை, தமிழ்நாடு
வகித்த பதவி : விஞ்ஞானி
விருதுகள் : கர்மவீரர் காமராசர் நினைவு விருது, நான்கு இந்திய விண்வெளி ஆய்வு விருதுகள்,ஐந்து முனைவர் பட்டங்கள்,சந்திரயான்-1 திட்டத்திற்காக மூன்று சர்வதேச விருதுகள்,ஆஸ்திரேலியா-இந்தியா இன்ஷ்டியூட்டின் மேல்னிலை விருது, சர்.சிவி.இராமன் நினைவு அறிவியல் விருது,ஹரி ஒம் ஆஷ்ரம் ப்ரடிட் விகரம் சாராபாய் அறியல் ஆய்வு விருது,கர்நாடக மாநில அரசின் அறிவியலுக்கான விருது, எச்.கே. ப்ரோடிய தேசிய அறிவியல் விருது, தேசிய ஏரோநாட்டிகல் அறிவியல் தொழில் நுட்ப விருது,ஶ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி தேசிய அறிவியல் விருது,அமர பாரதி தேசிய அறிவியல் விருது,தேசிய தரமையத்தின் பஜாஃஜ் நினைவு விருது,கொங்குச் சாதனையாளர் விருது,தமிழ் மாமணி, திருப்பூர் தமிழ்ச்சங்கம்,அறிவியல் அண்ணா,கர்நாடகா தமிழ்பேரவை,ஹுப்ளி,டாக்டர் இரஜா சர் முத்தையா செட்டியார் பிறந்த நாள் நினைவுப் பரிசு 2012,சி.பா.ஆதித்தனார் இலக்கியப்பரிசு-2013
வாழ்க்கை வரலாறு
மயில்சாமி அண்ணாதுரை, 1958ஆம் ஆண்டு ஜூலை திங்கள் இரண்டாம் நாள் கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா கோதாவடி கிராமத்தில் திரு.மயில்சாமி ஆசிரியருக்கும் திருமதி.பாலசரசுவதி அம்மையாருக்கும் மகனாய்ப் பிறந்தார். பதினோராம் வகுப்பு வரையான தனது அடிப்படைக் கல்வியைத் தாய்மொழியாம் தமிழில் அரசாங்கப் பள்ளிகளிலேயே படித்தவர். புகுமுக வகுப்பை பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியிலும், பொறியியல் இளநிலையைப் பட்டப் படிப்பை அரசு தொழில் நுட்பக்கல்லூரி, பொறியியல் முது நிலைப் பட்டப் படிப்பை பூ.சா.கோ.தொழில் நுட்பக்கல்லூரி மற்றும் பொறியியல் முனைவர் பட்டத்தை அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழகத்திலும் பெற்று, முழுக்க முழுக்கத் தமிழகத்திலேயே தனது கல்வியைப் படித்தவர் இன்றைய இந்த நிலவுத் தமிழர்.
இவரே முதன்முதலில் இந்தியா நிலாவுக்கு ஆய்வுக்கலம் அனுப்பிய சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குனர். இவர் கோயம்புத்தூர் அரசு பொறியியல் கல்லூரியில் தனது பொறியியல் இளங்கலைக் கல்வியைக் கற்றார். கோயம்புத்தூர் பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியலில் முதுமாணிப் பட்டம் பெற்றார். அண்ணாதுரை இதுவரை ஐந்து முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார்.
அண்ணாதுரை தனது விடுமுறை நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் செலவிடுவதை வழக்கமாகக்க கொண்டிருக்கிறார். மாணவர்களும் அவரது பேச்சை மிகவும் ஆவலுடன் கேட்கின்றனர். அதனால் இவர் இளைய கலாம் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.
தற்போதைய இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில், ‘கையருகே நிலா’ என்னும் தலைப்பில் தமது தொடக்க நாட்கள், சந்திரயான் பணி ஆகியவை அடங்குவதான நூல் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்தியாவின் முதல் செவ்வாய்ப் பயணம் பற்றிய தொடர் கட்டுரை ஒன்றை தமிழ் நாளிதழான தினத் தந்தியில், ‘கையருகே செவ்வாய்’ என்ற தலைப்பில் வாரந்தோறும் ஞாயிறன்று எழுதிவருகிறார்.
விண்வெளித் தொழில் நுட்ப ஆய்வு:
1982ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்தில் ஒரு அடிமட்ட அறிவியல் ஆய்வாளராகச் சேர்ந்து, தனது தளராத உழைப்பாலும் சிறு சிறு கண்டுபிடிப்புகளாலும் படிப்படியாக உயர்ந்து இன்று இந்திய விண்வெளி ஆய்வின் ஒரு முக்கிய அறிவியலாளராகத் தனது பெயரைப் பதித்துள்ளார். எட்டு இந்திய தேசிய செயற்கைக் கோள்களின் செயல்திட்ட இயக்குனராகச் சிறப்பாற்றியதின் பின் 2004இல் இந்தியாவின் முதல் நிலவுக்கலத்திட்டத்தின் இயக்குனராக உயர்ந்தார். கிட்டத்தட்ட 3000 இந்திய மற்றும் சர்வதேச அறிவியலாளர்களைத் தலைமை தாங்கி நிலவில் நீர்கண்டு பிடித்தது ஒரு வரலாற்று நிகழ்வு.
சந்திரயான்-1 திட்டத்தின் வெற்றிக்குப் பின், இந்தியாவின் முதல் நுண்ணலைத் தொலையுணர் செயற்கைக் கோள் உட்பட அனைத்துத் தொலையுணர் செயற்கைக் கோள்கள், இந்தியாவின் முதல் செவ்வாய்ப் பயணச் செயற்கைக்கோள், இந்தியாவின் இரண்டாவது நிலவுப் பயணம் போன்ற அறிவியல் செயற்கைக் கோள்களுடன் இந்தியக் கல்லூரி மாணவர்களின் செயற்கைக் கோள்கள் எனப் பெரிய செயற்கைக் கோள் பட்டாளத்தின் தலைமைத் திட்ட இயக்குனராக உயர்ந்திருக்கிறார் முனைவர். மயில்சாமி அண்ணாதுரை.
Thanks and regards
A s Govinda rajan
17/5 Sri andal flats andavar nagar second Street Kodambakkam Chennai