ராஞ்சி: தேசிய பெண்கள் ஹாக்கி லீக் போட்டியில் ஹரியானா, பெங்கால் அணிகள் வெற்றி பெற்றன.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் 21 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தேசிய ஹாக்கி லீக் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் பெங்கால், ஒடிசா அணிகள் மோதின. பெங்கால் அணிக்கு ஷாந்தி, 23வது, 39வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். ஒடிசா சார்பில் மோனிகா மட்டும் கோல் அடிக்க, பெங்கால் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
நேற்று நடந்த மற்றொரு போட்டியில் ஹரியானா அணி, மஹாராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 12வது நிமிடத்தில் ஹரியானா அணிக்கு மஞ்சு சோர்சியா ஒரு கோல் அடித்து கைகொடுத்தார்.
இரண்டாவது பாதியில், 37 வது நிமிடத்தில் பூஜா ஒரு கோல் அடிக்க, ஹரியானா 2-0 என முந்தியது. போட்டி முடிவதற்கு 5 நிமிடத்துக்கு முன் மஹாராஷ்டிரா வீராங்கனை சுகன்யா (55வது) ஒரு கோல் அடித்தார். முடிவில் ஹரியானா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதுவரை முடிந்த போட்டிகளின் முடிவில் ஒடிசா (12 புள்ளி) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.