tamilnadu epaper

2300 கிலோ போதைப்பொருட்கள் எரிப்பு

2300 கிலோ போதைப்பொருட்கள் எரிப்பு


சென்னை, ஏப்.19

தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் தலைமையில் தமிழ்நாடு அமலாக்கப் பணியகம் சி.ஐ.டி முன்னிலையில் போதையில்லா தமிழ்நாடு முயற்சியின் ஒரு பகுதியாக, பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் மனமயக்கப் பொருட்களை அழிக்கும் பணி, தமிழ்நாடு போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சுமார் 187 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 2215.71 கிலோ உலர் கஞ்சா, 58 கிலோ சாராஸ், 1 கிலோ ஹெராயின், 14 கிலோ கஞ்சா சாக்லெட் போன்ற போதைப்பொருட்களை அனைத்து சட்ட முறைகளையும் பின்பற்றி செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட எரிக்கும் ஆலையில் அழிக்கப்பட்டது.  

அதேபோல், நடப்பாண்டில் இதுநாள் வரை 253 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 3628.71 கிலோ உலர் கஞ்சா, 74.150 கிலோ ஹசிஷ், 58 கிலோ சாராஸ், 1 கிலோ ஹெராயின், 1.4 கிலோ கஞ்சா சாக்லெட்கள் போதைப்பொருட்கள் நுண்ணறிவுப் பிரிவினரால் எரிக்கப்பட்டது. 

இதனை காவல்துறை தலைவர், குற்றம், காவல் கண்காணிப்பாளர், போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு, சென்னை மற்றும் உதவி இயக்குநர், தமிழ்நாடு தடய அறிவியல் பிரிவு, சென்னை ஆகியோர் போதை மருந்துகள் மற்றும் மனமயக்கப் பொருள்களை அழிக்கும் செயல்முறையை கண்காணித்தனர்.

இந்த நிலையில் போதைப்பொருள்கள் மற்றும் போதைப்பொருள்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்களை கட்டணமில்லா தொலைபேசி உதவி எண்.10581 மூலம் மற்றும் வாட்ஸ்அப் எண்.9498410581 அல்லது மின்னஞ்சல் முகவரி [email protected] மூலம் பகிருமாறு பொதுமக்களுக்கு கேட்டுக் கொள்ளப்பட்டன.