ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் இந்தியா பாகிஸ்தான் இடையே ராஜாங்க ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் 450 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்த தரையில் இருந்து தரைக்கு பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையின் பெயர் அப்தாலி, இது பாகிஸ்தானால் சோன்மியானி ரேஞ்சில் சோதிக்கப்பட்டது.
பாகிஸ்தான் ஊடக அறிக்கைகளின்படி, அப்தாலி ஆயுத அமைப்பு என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணை, ‘எக்சர்சைஸ் சிந்து’ என்ற இராணுவப் பயிற்சியின் கீழ் சோதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆயுதப் படைகளின் செய்தி தொடர்பு பிரிவான இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) வெளியிட்டுள்ள அறிக்கையில், இராணுவத்தின் போர் தயார்நிலையை உறுதி செய்வதும், ஏவுகணையின் நவீன தொழில்நுட்ப அமைப்பை சரிபார்ப்பதும் இந்த ஏவுகணை சோதனையின் நோக்கமாகும் என்று தெரிவித்துள்ளது.
உலகளாவிய ஃபயர்பவர் தரவரிசையின்படி, இராணுவ சக்தி மற்றும் ஆயுத பலத்தின் அடிப்படையில் உலகின் 145 நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான் 12வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.